ஆண் என்றால் அமைதி
கதைப் புத்தகங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், சினிமாக்களில் சூனியக்காரக் கிழவிகளைப் படித்திருப்போம், பார்த்திருப்போம். ஆனால் சூனியக்காரக் கிழவர்கள், துஷ்ட தாத்தாக்களைப் பார்க்க முடியாது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..?
சிறுவர்களை விட சிறுமிகள் ஸ்மார்ட் ஆகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதுண்டு. அதனால் சிறுமிகளை எல்லோரும் கொண்டாடுவார்கள். இளம் பெண்களின் கவர்ச்சி எல்லோரையும் இழுப்பதுண்டு. கர்ப்பிணிகளுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. அம்மாக்களுக்கு எல்லோர் மனதிலும் உயர்வான இடம் உண்டு. அதேநேரம் வயதான பெண்கள் அதாவது முதிய அம்மாவை சுமையாகவே பிள்ளைகள் கருதுகிறார்கள்.
பொதுவாக வயதான அப்பாக்கள் மற்றும் வயதான அம்மாக்கள் நடவடிக்கையில் நிறைய வித்தியாசத்தைப் பார்க்க முடியும். தனது பேச்சு எடுபடாத இடங்களில் வயதான ஆண்கள் பேச்சைக் குறைத்துக்கொள்கிறார்கள். கிடைக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு அமைதியாக இருக்கிறார்கள்.
ஆனால், வயது முதிர்ந்த அம்மாக்கள் சுலபமாக தங்கள் உரிமையை விட்டுக் கொடுப்பதில்லை. மகன், மருமகள் நன்றாக கவனித்துக்கொண்டாலும் சின்னச்சின்ன குற்றம், குறை கண்டுபிடித்து தட்டிக் கேட்பார்கள். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் அடிக்கடி பிரச்னை வரும். திருமணமான புதிதில் அம்மாவுக்கு சப்போர்ட் செய்த மகன்கள், ஒரு கட்டத்துக்குப் பிறகு மனைவி பக்கம் மாறிவிடுவார்கள். இதனால் சண்டையில் வயதான அம்மாக்கள் தோற்றுப் போகிறார்கள். இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் சண்டை போடுகிறார்கள்.
ஒரு காலத்தில் தேவதையாக, தெய்வப்பிறவியாக மதிக்கப்பட்ட அதே பெண்ணை, வயதான பிறகு குடும்பத்தில் குழப்பம் உருவாக்கும் மோசமான கிழவியாகப் பார்க்கிறார்கள். இப்படி அல்லாடும் முதிய பெண்களை வைத்தே சூனியக்காரக் கிழவிகள் பாத்திரம் உருவாக்கப்படுகிறது. அழகைப் பெறுவதற்கும், அதிகாரம் அடைவதற்கும் சூனியக்காரக் கிழவிகள் எந்த எல்லைக்கும் போவதாகக் காட்டுகிறார்கள்.
வாய் பேசாமல் அமைதியாக இருப்பதால் கிழவர்களை புத்தராகவும் அதிகம் பேசுவதால் பாட்டிகளை சூனியக்காரக் கிழவியாகவும் உலகம் பார்க்கிறது. எனவே, பேச்சைக் குறைத்துக்கொண்டாலே மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
