ஞானகுரு பதில்
கேள்வி ; எனக்கு யாரும் உதவுவதில்லை. உண்மையாக உதவி செய்பவர்களை சரியாக அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி..?
- சி.தங்கமணி, நாமக்கல்
ஞானகுரு :
உங்களுக்கு உதவி செய்வதற்காக யாரும் இங்கு பிறக்கவில்லை. உங்களுக்கு உதவி செய்வது யாருடைய கடமையும் இல்லை, கட்டாயமும் இல்லை. எனவே, பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கூடாது.
யாராவது உதவி செய்வார்கள் என்ற எண்ணமே அபத்தமானது. உங்களுக்கு உதவும் ஒரே நபர் நீங்கள் மட்டுமே. எனவே, உங்களிடமே கேளுங்கள்.
உங்களிடம் என்ன திறமை இருக்கிறது, எவ்வளவு ஆற்றல் இருக்கிறது, எத்தனை தொடர்பு இருக்கிறது, எவ்வளவு சொத்து இருக்கிறது, என்ன செய்யமுடியும் என்றெல்லாம் தெளிவாக சிந்தனை செய்யுங்கள். உங்கள் தெளிவும், மன உறுதியும் நிச்சயம் உதவி செய்யும்.
உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைத் துல்லியமாகப் பட்டியலிடுங்கள். உங்கள் நிபுணத்துவத்தை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, தானாகவே மற்றவர்களின் உதவி உங்களுக்குக் கிடைக்கும்.
உங்களுக்கு உதவி செய்வதால் தங்களுக்கும் பயன் இருக்கும் என்று நம்புபவர்கள் நிச்சயம் வந்து சேர்வார்கள். இப்படி உதவி செய்பவர்களை உதாசீனம் செய்யாதீர்கள். ஏனென்றால், இந்த கணக்கு நியாயமானது.
ஒரு தொழில்முனைவோரின் தெளிவான திட்டம் மற்றும் இலக்கைக் கண்டுதான் முதலீட்டாளர்கள் அல்லது வழிகாட்டிகள் முன்வருகிறார்கள். எந்த ஒரு தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபாரம் நடத்த விரும்பியவர்களுக்கும் பணம் ஒரு தடையாக இருந்ததில்லை என்பதே உண்மை. தெளிவும், உறுதியும் உள்ளவர்களுக்கு உதவிகள் தானாக வந்து சேரும்.
