ஈஸி டிப்ஸ்
ஒருவரது முகத்தைப் பார்த்து அவர் மன அழுத்தத்தில் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் வெளிப்படையாக சிரித்து மனதுக்குள் அழுபவர்களே அதிகம். ஆனால், அக்கறையுடன் கூர்ந்து கவனித்தால், அவர் மன அழுத்தத்தில் இருப்பதை அறிய முடியும்.
எப்போதும் சோர்வாக இருப்பதுடன் போதிய அளவுக்கு தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவார். சின்ன விஷயங்களுக்குக்கூட எரிச்சலும் கோபமும் கொள்வார். விருப்பமான உணவு என்றாலும் சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்ட மாட்டார். யார் என்ன கேள்வி கேட்டாலும் ஒரு வார்த்தை அல்லது இரண்டு வார்த்தைகளில் பதில் வரும்.
ஏதோ ஒரு யோசனையில் தன்னை மறந்து இருப்பார். பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்ட மாட்டார். கூட்டத்தில் இருந்தாலும், யார் பேசுவதையும் கவனிக்க மாட்டார். அவரிடம் பேச வருபவர்களிடம் ஏதேனும் காரணம் சொல்லி தப்பித்துவிடுவார். சாதாரண விஷயங்களுக்கும் அதிக பதட்டம் அடைவார்.
இவை எல்லாம் மன அழுத்தத்தில் இருப்பதற்கு அறிகுறிகள். இவர்களுக்கு அன்பும் ஆதரவும் ரொம்பவே முக்கியம். அவர் மனம் விட்டுப் பேசுவதற்கு உதவுங்கள். அவரது பதட்டத்தை தணித்து ஆறுதல் சொல்லுங்கள். தேவையெனில் மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள். மன அழுத்தத்திலிருந்து எளிதில் மீண்டுவிடலாம் என்று நம்புங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
