சாதனைக்கு எதுவும் தடையில்லை
எல்லோருக்கும் தாழ்வு மனப்பான்மை உண்டு. அதாவது, இன்னும் கொஞ்சம் வெள்ளையாகப் பிறந்திருக்கலாம், கொஞ்சம் உயரமாக வளர்ந்திருக்கலாம், பணக்கார வீட்டில் பிறந்திருக்கலாம்’ என்றெல்லாம் தங்கள் உடல் மீதும் வாழ்க்கை மீதும் நிறைய குற்றமும், குறையும் சொல்வார்கள். எத்தனை குறைகள் இருந்தாலும் ஜெயிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இரண்டு நபர்களை பார்க்கலாம்.
கைகளே கால்கள் ciyon clark
ஓஹியோ நகரைச் சேர்ந்த சீயோன் கிளார்க்கிற்கு பிறவியிலேயே இரண்டு கால்களும் இல்லை. இப்போது அவர் மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தயம் உள்ளிட்ட பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கைகளால் வேகமாக ஓடுகிறார். 20 மீட்டர் தூரத்தை 4 புள்ளி 78 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஜிம்மில் மூன்று நிமிடங்களில் கைகளால் அதிக பாக்ஸ் ஜம்ப் மற்றும் அதிக டைமண்ட் புஷ்-அப்கள் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மன உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் உலக சாதனையை முறியடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சீயோன் கிளார்க்.
கால்களே கைகள் Vitoria Bueno
பிரேசிலைச் சேர்ந்த விட்டோரியா புவேனோவுக்கு பிறவியில் கைகள் இல்லை. கால்களைக் கொண்டே சாப்பிடுவது, குளிப்பது போன்ற எல்லா செயல்களையும் செய்தவருக்கு பாலே நடனம் ஆட ஆசை வந்தது. பாலே நடனத்தை பேலன்ஸ் பண்ணுவதற்கு கைகள் மிகவும் அவசியம் என்றாலும் விடாமுயற்சியுடன் நடனம் கற்றுக்கொண்டார். அமெரிக்காவின் காட் டேலன்ட் ஆல் ஸ்டார்ஸ் 2023 ஷோவில் பங்கேற்று மாபெரும் சாதனை படைத்திருக்கிறார். கைகள், கால்கள் இல்லாமலே வெற்றி பெறுகிறார்கள் எனும் போது, நமது சின்னச்சின்ன குறைகளை பெரிது படுத்தலாமா..? குறை என்று எதுவும் இல்லை என்ற மனநிலையுடன் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
