உண்மையான கூட்டாளி
பெற்றோர் பணக்காரர்களாக இருந்தால், யாராவது வழி காட்டியிருந்தால், சிலர் உதவி செய்திருந்தால் வெற்றி அடைந்திருப்பேன் என்று சொல்பவர்கள் ஒருபோதும் வெற்றி அடைய மாட்டார்கள். வெற்றி என்பது ஒவ்வொரு மனிதரும் சுயமாக சம்பாதிக்க வேண்டிய பரிசு.
இதற்கு வேறு மனிதர்களை கூட்டாளியாக சேர்க்கக்கூடாது. அதேநேரம், சில பண்புகளை கூட்டாளியாக வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு காரணத்துக்காகவும் சுய மரியாதையை இழக்காதீர்கள். தோற்றத்துக்கும் ஆரோக்கியத்திற்கும் தனி முக்கியத்துவம் கொடுங்கள். இவையே வாழ்நாள் முழுவதும் உங்கள் சொத்தாக இருக்கக்கூடியவை.
உங்கள் முயற்சிகளை கிண்டல் செய்பவர்களைக் கண்டு மனம் தளராதீர்கள். பணம் சம்பாதிக்கும் வரை மட்டுமே இவர்கள் கேலி செய்வார்கள். நீங்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பவரும் ஏமாற்றலாம். அப்படிப்பட்ட நபர்களை விட்டு விலக வேண்டுமே தவிர, பழி வாங்கத் துடிக்காதீர்கள். வாழ்க்கை திசை மாறிவிடும்.
உங்கள் கணவர் அல்லது மனைவி பிரிந்துவிடுவாரோ என்று அச்சம் கொள்ளாதீர்கள். நீங்கள் பிரிந்துவிடக் கூடாது என்று அவர்கள் தவிக்கும் வகையில் நடந்துகொள்ளுங்கள். தோல்வி கிடைக்கும்போது பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். பிறரை குற்றம் சாட்டாதீர்கள். வெற்றி கிடைத்தால், கூட்டு முயற்சி என்று உடன் இருப்பவர்களை பாராட்டுங்கள். இத்தகைய பண்புகளை வளர்த்துக்கொண்டால் வெற்றி நிச்சயம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
