முந்திச் செல்பவருடன் போட்டியிட்டால் என்னாகும்?

பொறாமைக்கு குட் பை

தினமும் நிறைய பேர் புதுசா கார் வாங்குறாங்க, புதுசா பங்களா கட்டுறாங்க. அவங்களைப் பார்த்து யாரும் பொறாமைப்படுவதில்லை. ஆனால், உறவினர்கள் அல்லது நண்பர்கள் புதிதாக ஒன்று வாங்கிவிட்டால் உடனே தாங்களும் ஏதாவது ஒன்று வாங்குவதற்கு ஆசைப்படுகிறார்கள்.

அதிக ஃபீஸ் வாங்கும் பள்ளியில் பிள்ளையை சேர்ப்பது, டியூஷன் அனுப்புவது, கோச்சிங் அனுப்புவது, டிஃபன் பாக்ஸ் வாங்குவது என எல்லாவற்றிலும் மற்றவர்களைப் பின்பற்றுகிறார்கள். பள்ளியில் முதல் மார்க் வாங்காவிட்டாலும் பரவாயில்லை, பக்கத்துவீட்டுப் பையனை விட இரண்டு மார்க் கூடுதலாக வாங்கினால் போதும் என்று நினைக்கிறார்கள். தீபாவளிக்குப் பக்கத்து வீட்டுக்காரர் புதிய செல்போன் வாங்கினால் இவர்களும் ஏதேனும் வாங்கத் துடிக்கிறார்கள். அடுத்தவர் போன்று வாழ்வது தான் மகிழ்ச்சி என்று தவறாக நினைக்கிறார்கள்.

ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, மற்றவர்கள் அல்ல. அடுத்தவர் போன்று வாழ நினைத்தால் சொந்த மகிழ்ச்சி பறி போய்விடும்.

வாகனத்தில் செல்லும்போது உங்களை முந்திச் செல்பவருடன் போட்டியிட்டால், உங்கள் வேகத்தை அவர் தீர்மானிக்கிறார் என்று அர்த்தம். எனவே, தேவையில்லாத போட்டியில் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் முன்னேற்றத்திற்காக போட்டியிடுங்கள். உங்கள் லட்சியத்துக்காகப் போட்டியிடுங்கள். குடும்ப ஒற்றுமைக்காகப் போட்டியிடுங்கள். இதுவே உண்மையான மகிழ்ச்சி.

Leave a Comment