டிங்க் எனும் புதிய வாழ்க்கை
திருமணம் முடித்த ஒரு வருடத்திற்குள் குழந்தை எதிர்பார்ப்பது இந்திய கலாச்சாரம். அதற்குள் குழந்தை பிறக்கவில்லை என்றால் ஆயிரத்தெட்டு கேள்விகள் வரும். ரெண்டு பேரும் சந்தோஷமாத்தானே இருக்கீங்க, யாருக்காச்சும் உடம்புல குறை இருக்குதா, கோயில்ல போய் விரதம் இருங்க, ஆஸ்பத்திரிக்குப் போங்க என்று இலவச ஆலோசனை வழங்கிக்கொண்டே இருப்பார்கள். அதனாலே தெருவுக்கு ஒரு கருத்தரித்தல் மையம் தொடங்கப்படுகிறது.
அதேநேரம், கட்டாயக் குழந்தை என்ற கலாச்சாரத்தை அடித்து நொறுக்குகிறது டிங்க்.
அதாவது சில தம்பதிகள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல், சுதந்திரமாக வாழ்வதற்கு ஆசைப்படுகிறார்கள். குழந்தை வளர்ப்பது பெரும் தொல்லை என்று பிள்ளை பெறாமல் தவிர்ப்பதே டிங்க். அதாவது, நமக்கு நாம் மட்டுமே. டபுள் இன்கம் நோ கிட்ஸ் Double Income, No Kids என்ற புதிய கலாச்சாரம்.
யாருக்கு டிங்க்…?
பெரும்பாலும் இரண்டு பேரும் வேலைக்கு போகும் தம்பதிகள் இப்படியொரு முடிவு எடுக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதாவது பணிச் சூழல், புரமோஷன் வாய்ப்பு, துணைக்கு ஆதரவுக்கு யாரையும் வைத்துக்கொள்ள முடியாத நிலைமை, குழந்தைக்கு நேரம் ஒதுக்க விருப்பமின்மை காரணமாக தம்பதிகள், குழந்தைகள் பெறுவதைத் தள்ளிப்போடுகிறார்கள் அல்லது குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள்.
இப்படிப்பட்ட தம்பதியரிடம் பணம் தேவைக்கும் அதிகம் இருக்கிறது. வரவை விட செலவுகள் குறைவாக இருப்பதால், மீதமிருக்கும் பணத்தை சந்தோஷமாக செலவிட விரும்புகிறார்கள். ஜென் Z தலைமுறையினர் இந்த மாதிரியான வாழ்க்கை முறையை அதிகம் தேர்வு செய்கிறார்கள். ஒரு சமீபத்திய ஆய்வின் படி, 23% தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.
வெளிநாட்டில் அதிகமாக இருக்கும் இந்த கலாச்சாரம் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது. குழந்தைகள் இல்லாததால் பொருட்கள் வாங்குவது, சுற்றுலா செல்வது, பொழுதுபோக்கு மற்றும் சேமிப்பு ஆகியவையில் சுதந்திரம் கிடைப்பதாக தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
என்ன காரணம்?
குழந்தை பிறந்துவிட்டால் சுதந்திரம் பறிபோகும் என்று அதிகம் பெண்கள் நினைக்கிறார்கள். கிட்டத்தட்ட 44% பேர் தனிப்பட்ட விருப்பம், தொழில், வேலையில் கவனம் செலுத்த விரும்புவதால் குழந்தை வேண்டாம் என்கிறார்கள்.
இரண்டு பேர் சம்பாதித்தும் போதிய அளவு பொருளாதாரம் இல்லை என்று நினைக்கும் சிலரும் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் காட்டுவதில்லை.
நிறைய வீடுகளில் பிள்ளைகளால் பெற்றோருக்கு மோசமான அனுபவங்களே கிடைக்கிறது. இதனை கண் முன்னால் பார்ப்பதால் குழந்தை வேண்டாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
மேலும், பெற்றோரால் கிடைத்த மோசமான அனுபவங்களால் குழந்தை வேண்டாம் என்றும் சிலர் முடிவு செய்கிறார்கள். இந்த விஷயத்தில் பெண் தீர்மானமே முக்கியத்துவம் பெறுகிறது. ஆண் வேண்டுகோள் வைத்தாலும் அதை பெண் நிராகரிக்கிறார்.
பொருளாதாரத்தின் பங்கு
இந்தியாவில் முந்தைய தலைமுறையினர் பெரும்பாலும் பெற்றோரையும் சமூகத்தையும் சார்ந்திருந்தனர். எனவே படிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள் பெற்றுக்கொள்வது என அனைத்தும் பெற்றோரால் தீர்மானிக்கப்பட்டதாக இருந்தது. இதில் கேள்வி எழுப்புவதற்கு யாருக்கும் உரிமையே இல்லை என்று கருதப்பட்டது.
உலகமயமாக்கல் இளம் தலைமுறைக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கிவிட்டது. யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும், யார் பேச்சையும் கேட்கவேண்டிய சூழலும் இல்லை ஆகவே, இன்றைய தலைமுறையினர் இந்த புதிய வாழ்க்கை முறையை முயற்சித்துப் பார்க்க விரும்புகிறார்கள்.
பொருளாதார ரீதியாக ஒரு தம்பதிக்கு இது மிகப்பெரிய சுதந்திரம். நிறைய பணம் சேர்த்துவைப்பதற்கு வாய்ப்பு. அதேநேரம், இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இந்த முடிவு சரி அல்லது தவறு கருத்து சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. பொருளாதார ரீதியாக நிச்சயம் சில நன்மைகள் இருக்கிறது என்றாலும், அதற்காக இவர்கள் என்னவெல்லாம் இழக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தென்னிந்தியாவில் சரிந்து வரும் குழந்தை பிறப்பு விகிதமும் இங்கே கவனம் பெறுகிறது. சமீபத்திய எஸ்.ஆர்.எஸ். -Sample Registration Survey 2021 தரவுகள்படி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.5, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.6 ஆக உள்ளது. மக்கள் தொகையை நிலையாகப் பராமரிக்கத் தேவையான 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதத்தைவிட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
தாமத முடிவு
சில தம்பதிகள் திருமணத்திற்குப் பிறகு சில வருடங்கள் டிங்க் வாழ்க்கை முறையை பின்பற்றி, பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வருகிறார்கள். சிலர் குழந்தை இல்லாமல் பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, மனதளவில் வெறுமையை உணர்கிறார்கள். அந்த நிலையில் தத்தெடுக்க முடிவு செய்கிறார்கள். விருப்பமான குழந்தையை தத்தெடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். இது ஒருவகை மனநல பாதிப்பை உருவாக்குகிறது. தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லையோ என்று புலம்புகிறார்கள்.
பிரிவு நிரந்தரம்
தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை வேண்டும் என்ற முடிவும் இன்னொருவர் வேண்டாம் என்று முடிவு எடுப்பதும் மன அழுத்தமாக மாறுகிறது. சில நேரங்களில் இதுவே விவாகரத்துக்கும் காரணமாகிறது.
குழந்தைகள் பெற்றுக்கொண்டாலும் பிரிவு என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், தங்களுக்கு என ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் வயதான காலத்தில் நிம்மதியும் நம்பிக்கையும் தருகிறது. எனவே, டிங்க் வாழ்க்கையைத் தேர்வு செய்வது தனிப்பட்ட விஷயம். அதேநேரம், நன்கு ஆய்வு செய்து தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.
தாமதமாக முடிவை மாற்றிக்கொள்ளலாம் என்றாலும், அது தேவையற்ற மன அழுத்தங்களைக் கொடுக்கும். எனவே, திங்க் அண்ட் டிங்க்.
