மகிழ்ச்சிக்கு 21 சூத்திரங்கள்

இந்த மாத புத்தகம் – The way to happiness

எப்படி வெற்றி அடைவது, எப்படி மன அழுத்தத்தை சமாளிப்பது, குழந்தை வளர்ப்பது எப்படி என்பதையெல்லாம் தேடுவதற்கு எக்கச்சக்க புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், மகிழ்ச்சியாக இருப்பதற்கு வழி காட்டும் புத்தகங்கள் ரொம்பவே குறைவு.

ஏனென்றால் சந்தோஷத்தை வெளியே தேட முடியாது. அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம், இதனை கற்றுத்தருவது கடினம் என்றாலும், அந்த வகையில் எழுதப்பட்ட ஒரு புத்தகமே இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் எழுதிய, ‘தி வே டூ ஹேப்பினஸ்’. இந்த புத்தகம் உலகம் முழுக்க சுமார் 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் சந்தோஷத்தை அடைவதற்கு 21 வழிமுறைகள் சொல்லித்தரப்பட்டுள்ளன. இவற்றைத் தெளிவாக உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம் என்கிறார் எழுத்தாளர் ரான் ஹப்பார்ட்.

சந்தோஷம் அடைவதற்கு அவர் காட்டும் எளிய சூத்திரங்களைப் பார்க்கலாம்.

1. முதலில் உடல் ஆரோக்கியம் முக்கியம். மனிதருக்கு நோய் வந்துவிட்டால் சந்தோஷம் காணாமல் போய்விடும். எனவே, உடலை மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.

2. நிறைய பேர் உடனடி சந்தோஷத்தை மட்டும் தேடுகிறார்கள். இந்த உடனடி இன்பம் எப்போதும் மோசமான பின்விளைவுகள் தரும். எனவே, சாதாரண இன்பத்திற்கு அடிமையாகிவிடாமல் மனதைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களைத் தெரிந்த அனைவருக்கும் உண்மையாக இருங்கள். யாரையும் ஏமாற்றி மகிழ்ச்சி அடைய நினைக்காதீர்கள். இது, உறவுகள், நண்பர்கள், பிசினஸ் கூட்டாளிகள் என எல்லோருக்கும் பொருந்தும்.  

4. உங்கள் வயது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, உங்களை விட குறைந்த வயது உள்ளவர்களுடன் அதிகம் நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோர், வயது முதிர்ந்தோரை உதாசீனம் செய்யாதீர்கள். அவர்களுக்குத் தேவை குறைவாகவே இருக்கும். கொஞ்ச நேரம் பேசவேண்டியிருக்கும். தயங்காமல் செய்யுங்கள்.

6. உங்களுக்கு என ஒரு தனித்துவம் வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பெருமைப்படவும், பொறாமைப்படும் அளவிலும் அந்த தனித்துவம் இருக்கட்டும்.

7. உண்மை பேசுங்கள். எந்த ஒரு சூழலிலும் பொய் சொல்வதை தவிர்த்து விட்டு மெய்யாக இருக்க பழகுங்கள். உண்மை கசப்பாக இருந்தாலும் பரவாயில்லை, மனதார ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் எதற்காகவும் குற்றம் சொல்லாதீர்கள். தவறு செய்திருந்தாலும், எது தவறு என்பதை சுட்டிக் காட்டுவது மட்டும் போதும். வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த வேண்டாம்.

9. சட்டத்துக்கு விரோதமான காரியம் எதையும் செய்யாதீர்கள். நிறைய பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு என்றாலும் நீதிக்குப் புறம்பான காரியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். நியாயம் ஜெயிக்கிறதோ இல்லையோ, அந்த பக்கத்திலே நில்லுங்கள்.

10. பிறருக்கு உங்களால் இயன்ற உதவிகளை பாரபட்சமின்றி செய்யுங்கள். உதவி வேண்டும் என்று கேட்கட்டும் என்று காத்திருக்க வேண்டாம். உதவி தேவைப்படுகிறது என்று தெரிந்தாலே செய்துவிடுங்கள்.  

11. உங்களைத் தேடி வந்து உதவி செய்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுங்கள். ஏதேனும் ஆதாயத்துக்காக உதவி செய்கிறாரோ என்று சந்தேகப்பட வேண்டாம்.  

12. உங்கள் சுற்றுச்சூழலை முடிந்த வரையிலும் சிறப்பாக வைத்துக்கொள்ளுங்கள். குப்பைக்கூடை நிரம்பி வழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் இருப்பிடத்தின் சுத்தமே உங்கள் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும்.

13. அடுத்தவர் அனுமதி பெறாமல் எந்த பொருளையும் எடுக்காதீர்கள். குடும்பத்தில் எந்த முடிவையும் தனியே எடுக்க நினைக்காதீர்கள்.

14. வாக்கு கொடுத்து விட்டால் அதை எப்படியாவது காப்பாற்றுங்கள். சரியான தருணத்தில் வாக்கை காப்பாற்ற முடியாது என்றால், முன்கூட்டியே தகவலை தெரிவித்து மன்னிப்ப்பு கேளுங்கள்.

16. ஓய்வு நேரத்திலும் சுறுசுறுப்பாக இருக்காதீர்கள். சும்மா இருப்பதே சுகம் என்பதை அனுபவித்து மகிழுங்கள்.

17. கற்றுக்கொள்வதற்கு எல்லையே இல்லை. புதுப்புது கலைகள் கற்றுக்கொள்ளுங்கள். நல்ல நூல்களை எல்லாம் படிக்க வேண்டும். எந்த நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18. அடுத்தவர்களுடைய நம்பிக்கை, மதம் உணர்வுகளை மதியுங்கள். அவர்களுடைய மதங்களை விட உங்கள் மதம் உயர்ந்தது என்று புரிய வைக்க முயற்சி செய்யாதீர்கள். இந்த விஷயத்தில் யாரையும் குறையோ, கேலியோ செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் செய்த தீயசெயல்களை பெரிது படுத்தாதீர்கள். அவர்கள் மனம் மாறினாலும் மாறாவிட்டாலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

20. உங்களுக்கு மற்றவர்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதையெல்லாம் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

21. இந்த உலகம் இயற்கை வளங்களால் நிறைந்தது, இங்கு யாருக்கும் எதுவும் சொந்தமானது இல்லை. எனவே, நிறைய சேமித்து வைக்காதீர்கள். மகிழ்ச்சியுடன் செலவழிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நிறைய பேர் சேமித்து வைத்த பொருட்களை அனுபவிக்க முடியாமலே செத்துப் போகிறார்கள்.

என்வே, நல்லதை நினையுங்கள், நல்லதை செய்யுங்கள். நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

  • ஒய்.பி. இருதயராஜ்

Leave a Comment