உலகமே விலகும்போதும், மகிழ்ச்சியுடன் உங்களுடன் நிற்பவரே உண்மையான நண்பர்.

மந்திரச்சொல்

சிக்கலான தருணங்களில் மனிதருக்கு தனிமையே அதிக அச்சம், வேதனை தருகிறது. இந்த சமூகமே தன்னை நிராகரித்துவிட்டதாக உணரும்போது மனம் மட்டுமின்றி உடலும் வலிக்கிறது.

அத்தகைய நேரத்தில் ஒரு நண்பரின் அன்பான வார்த்தை, அமைதியான இருப்பு, தோளில் உரிமையுடன் தட்டிக்கொடுக்கும் ஆறுதல் மருந்து போல மனதை ஆற்றுகின்றன. பணம், பொருள் தரவில்லை என்றாலும் உங்களுக்கு சிரிப்பு வரவழைக்க முயற்சிப்பார்கள். இந்த அசட்டுத்தனமே குருட்டுத்தனமான அன்பு.

பொதுவாக வெற்றியில் நம்மைச் சுற்றி பலர் இருப்பார்கள். ஆனால் தோல்வி, துயரம், அவமானம், இழப்பு போன்ற சோதனைகளில் பல உறவுகள் மெதுவாக விலகிவிடும். காரணம், மனித மனம் இயல்பாகவே மகிழ்ச்சியையும் வெற்றியையும் நோக்கி ஈர்க்கப்படுகிறது. துன்பத்தையும் சுமையையும் தவிர்க்க முயல்கிறது. சோதனைக் காலமே உண்மையான நண்பரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஒருவர் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும்போது, அவருக்கு கிடைக்கும் உண்மையான ஆதரவு அவரது கவலை, மனச்சோர்வு, பயத்தைக் குறைக்கிறது. பிரச்சினையை உடனே தீர்க்க முடியாவிட்டாலும், நான் தனியாக இல்லை; என்னுடன் ஒருவர் இருக்கிறார் என்ற பாதுகாப்பு உணர்வு எழுச்சியை உருவாக்குகிறது.

உண்மையான நண்பர் உங்கள் துயரத்தை ஒரு சுமையாகப் பார்க்க மாட்டார். அது தனது பொறுபாக கருதுவார். தோல்வியில் உங்கள் கையைப் பிடித்து, ’இதுவும் கடந்து போகும்’ என்று நம்பிக்கை கொடுப்பார்.

எனவே, நண்பர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. சோதனையின் நேரத்தில் அருகில் நிற்கும் ஒரே ஒருவர் என்றாலும் போதும். அதுவே மிகப் பெரிய வரம். உலகம் உங்களை மதிப்பது உங்கள் வெற்றிக்காக இருக்கலாம். ஆனால் உண்மையான நண்பர் உங்களை மதிப்பது அன்புக்காக. இதுவே நட்பின் சக்தி.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment