மந்திரச்சொல்
வெற்றி, பாராட்டு மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி மனதை இனிமையாக்குகிறது என்றாலும் விரைவில் மறைந்து போகிறது. அதேநேரம், மற்றவர்களுக்கு நாம் கொடுத்த மகிழ்ச்சியினால் கிடைக்கும் அனுபவம் மனதில் ஆழமாகப் பதிந்து நீண்ட காலம் சந்தோஷம் தருகிறது.
விருப்பப்பட்டு வாங்கிய காஸ்ட்லி பொருட்கள், மகிழ்ச்சியுடன் சுற்றுலா சென்ற இடங்கள், மிகப்பெரிய லாபம் அல்லது சம்பள உயர்வு போன்ற எல்லாமே ஒரு கட்டத்தில் சாதாரணமாகத் தோன்றும். ஏனென்றால் அந்த மகிழ்ச்சியை அடைந்தபிறகு அனுபவிப்பதற்கு எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.
அதேநேரம், பிறருக்கு துயரத்தில் ஆறுதலாக நின்ற தருணம், பசியுடன் இருந்தவருக்கு உணவு கொடுத்த நிகழ்வுகள், அடுத்தவர் வெற்றியை மனதார பாராட்டிய நேரம், பெற்றோர், உறவினர், நண்பர்கள் முகத்தில் சிரிப்பை மலரச் செய்த சம்பவங்கள் எல்லாமே மூளையில் வெறும் நினைவுகளாக இல்லாமல், சிறப்பான வாழ்க்கை அனுபவங்களாகப் பதிந்து விடுகின்றன.
மற்றவர்களுக்கு உதவும்போது அல்லது அவர்களை மகிழ்விக்கும்போது, மூளையில் டோபமைன், ஆக்ஸிடோசின், செரோட்டோனின், எண்டார்பின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதனால் அந்த அனுபவம் இனிமையான நினைவாக மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கிறது.
ஒருவரது வாழ்க்கையை மாற்றிய தருணம் அல்லது அவருக்கு வரவழைத்த புன்னகை, நம்பிக்கை காலம் கடந்த பிறகும் மனதை நெகிழச் செய்கிறது. ஏனெனில், அது நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்ற உணர்வை உருவாக்குகிறது. அந்த அர்த்தமுள்ள அனுபவங்கள் நீண்ட காலம் மனதில் வாழ்கின்றன.
ஒரு ஆசிரியர் தனது பழைய மாணவர் உயர்ந்த நிலையை அடைந்ததைப் பார்த்து பெருமைப்படும் தருணம், ஒரு மருத்துவர் குணமடைந்த நோயாளியின் நன்றியை நினைத்து மகிழும் நிமிடம், ஒரு பெற்றோர் தனது பிள்ளையின் புன்னகையை நினைத்து கண்கலங்கும் தருணங்கள் எல்லாமே பிறரை மகிழ்வித்ததன் பலனாக கிடைக்கும் அழியாத கோலங்கள்.
பணம் சேர்ப்பது வாழ்க்கையை வசதியாக்கலாம். பதவி உயர்வு வாழ்க்கைக்கு மதிப்பைக் கொடுக்கலாம். ஆனால், பிறர் மனதில் விதைத்த மகிழ்ச்சி மட்டுமே, நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும், நம் நினைவுகளுக்கு நிரந்தரமான மகிழ்ச்சியும் தருகிறது.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
