ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : முக்தி பெற என்ன செய்ய வேண்டும்?
- ஏ.வள்ளியம்மாள், வேலூர்.
ஞானகுரு :
முக்தி என்றால் என்ன? முக்தி அடைவதற்கு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வழிகள் சரிதானா? முக்தி அடையாதவர்கள் நிலைமை என்னவாகும்? முக்தி அடைந்தவர்களுக்கு மறுபிறப்பு கிடையாதா? இதுவரை முக்தி அடைந்த யாரையாவது மனிதகுலம் கண்டுள்ளதா? – இதுபோன்ற கேள்விகளுக்கு யாரிடமும் தெளிவான பதில் கிடையாது.
அதனால், இந்த பிறவியில் பிறருக்குத் துன்பம் இழைக்காமல் நிம்மதியாக வாழ்ந்து வாருங்கள். அதுபோதும். முக்தி என்று ஒன்று இருந்தால் நிச்சயம் அங்கு போய்ச் சேர்வீர்கள்.
…………………
கேள்வி : நதிகளை இணைப்பது இயற்கையின் முரண்பாடு ஆகாதா..?
- டி.சந்திரசேகர், ராஜபாளையம்.
ஞானகுரு :
இயற்கை முரண் பற்றி இன்றைய மனிதர்கள் பேசுவது வேடிக்கை. ஆடை அணிவதும், உணவு சேமிப்பதும், கற்களால் வீடு கட்டுவதும், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதும் இயற்கையா? மனிதன் சிந்திக்கத் தொடங்கியதுமே இயற்கையுடன் முரண்பட்டுவிட்டான். தலைக்கு மேல் வெள்ளம் போகிறது, இனி சாணுக்கும் முழத்துக்கும் வித்தியாசம் கிடையாது.
