ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : மனதுக்கும் உடலுக்கும் தொடர்பு உண்டா..?
- எம்.முத்துலட்சுமி, சாத்தூர்.
ஞானகுரு :
உடலுக்கு அளப்பரிய சக்தியும், மனசுக்கு மிகப்பெரும் ஆற்றலும் உண்டு. உடலை மனமும், மனதை உடலும் ஒன்றையொன்று அடக்கியாளப் போராடுவது வழக்கம். ஒருவரது உடலை தோற்கடிப்பது மிக எளிது, காயப்படுத்துவதும் சுலபம். ஆனால் அவர் மனதை தோற்கடிக்கவும், காயப்படுத்துவதும் அவர் அனுமதித்தால் மட்டுமே முடியும்.
உடலில் சிலருக்கு தீராத நோய் இருந்தாலும் ஆனந்தத்திற்கு குறைவு இருக்காது. ஆனால் சிலர் சின்ன தலைவலிக்கும் உலகமே இடிந்துவிட்டதாக வருந்துவார்கள். நீங்கள் உடலின் கட்சியா அல்லது மனதின் பக்கமா என்பதில் இருக்கிறது வாழ்க்கையின் வெற்றி ரகசியம்..!
…………………
கேள்வி : இன்றைய இளைஞர்கள் தொழில் செய்யப் பயப்படுவது ஏன்?
- பி.ராமசாமி, சிதம்பரம்.
ஞானகுரு :
சொந்தத் தொழில் என்பது தவம் போன்றது. கவனம் சிதறாமல் பயணிக்க வேண்டும். நேரம், காலம், உழைப்பு, பணம் எத்தனை கொடுத்தாலும் வெற்றி நிச்சயமில்லை. அதனால் சிரமம் எடுத்து கோடிகள் சம்பாதிப்பதைவிட, அடிமையாக வாங்கும் லட்சங்களே இன்றைய இளைஞனுக்கு இனிக்கிறது. ஏனென்றால் அவனுக்குத் தேவை சொகுசு மட்டுமே.
தொழில் செய்ய விரும்புபவருக்கு கனவு வேண்டும், அந்தக் கனவு விடாமல் துரத்த வேண்டும். அத்தகைய வெறி இல்லாதவர்கள் அடிமையாகப் போவதே நல்லது.
