அறிவியல் விழிப்புணர்வு
கேள்வி : என்ன சந்தேகம் என்றாலும் ஏஐ மூலம் தெளிவு பெற முடிகிறது. வீடியோக்கள் மூலம் செய்முறைகள் அறிய முடிகிறது. பிறகு எதற்கு பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று படிக்க வேண்டும்..?
- சி.ஹரீத், மங்களூர்.
ஞானகுரு :
கேட்கும் கேள்விக்கு ஏஐ பதில் சொல்லும். என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதைக் கற்றுத்தருவது அனுபவமும் ஆசிரியர்களும் தான். ஏஐ தரும் தகவலில் எது உண்மை, எது தவறு என்று சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதே கல்வியின் முக்கிய நோக்கம்.
கால்குலேட்டர் வந்த பிறகும் கணிதம் மறையவில்லை. அதுபோல ஏஐ வந்த பிறகும் கல்வி மறையாது. ஏஐயை பயன்படுத்தத் தெரிந்தவர்கள், மனித உறவுகளை புரிந்தவர்கள், சிந்திக்கத் தெரிந்தவர்கள், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே எதிர்காலத்தில் தாக்குப்பிடிப்பார்கள்.
இப்போது விழிப்புணர்வு மக்களிடம் குறைந்துவருகிறது. பைக், கார், டி.வி., வாஷிங்மெஷின் எப்படி இயங்குகிறது என்று தெரியாது. மின்சாரம், தண்ணீர், காய்கறிகள் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாது. செல்போனில் எப்படி காட்சி தெரிகிறது, சோப்புக்கு மூலப்பொருள் எதுவென்றும் தெரியாது. ஏனென்றால், இவற்றை அறிந்துகொள்வது அவசியமில்லை என்றே கருதுகிறார்கள். ஏஐ மனிதரை இன்னமும் சோம்பேறியாக்கிவிடும்.
தொழில்நுட்ப வளர்ச்சியை யாரும் நிறுத்த முடியாது. ஏஐ என்பது உங்கள் கையில் இருக்கும் நெருப்பு. இதன் மூலம் இருளைப் போக்கலாம் அல்லது கையை சுட்டுக்கொள்ளலாம். நிறைய கற்றுக்கொள்ளுங்கள். சொந்தமாக யோசித்து விடை கண்டுபிடியுங்கள். அதை ஏஐ உதவியுடன் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதுவே, சரியான தீர்வு. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
