உளவியல் ஆலோசனை
கேள்வி : எல்லாமே மிகச்சரியாக இருக்கவேண்டும், எல்லோரும் மிகச்சரியாக செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். இது, சரிதானே..?
- என். வசந்தன், ஆதம்பாக்கம்.
ஞானகுரு :
மிகச்சரியானவை, முழுமையானவை என்று எதுவும் இல்லை. முழு உண்மை, முழு பொய் என்றும் எதுவும் இல்லை. ஒவ்வொரு நபரின் பார்வையும் வேறு. வெள்ளை உடை அணிவது தலைமைப் பண்பு என்று நினைக்கலாம். அதே வெள்ளை உடையை தோல்வியின் அடையாளமாக ஒருவர் கருதலாம்.
அதனால், மிகச்சரியாக செயலை செய்ய நினைப்பது ஆபத்தான மனநிலை. இப்படி செய்ய நினைப்பவர்கள், தன்னை சுற்றி எல்லோரும் அதேபோன்று இருக்கவேண்டும் என்று கருதுவார்கள். இந்த வட்டம், எல்லை இல்லாமல் வளர்ந்துகொண்டே போகும். இது, மிகச்சரியான ஒரு தவறை உருவாக்கிவிடும்.
எல்லாமே மிகச்சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் அதிக மன அழுத்தம் மற்றும் தோல்வி பயத்திற்கு ஆளாகிறார்கள். நான் சொல்வது அல்லது செய்வது மட்டும்தான் சரி என்ற எண்ணம் மற்றவர்களின் கருத்துகளையும், தனித்துவத்தையும் மதிக்கும் பண்பைக் குறைக்கிறது.
எனவே, இந்த விளையாட்டில் சிக்கிக்கொள்ள வேண்டாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மிகச்சரியானதில் இருந்து தப்பிவிடுங்கள்.
மிகச்சரியானது என்பது ஆணவம். நான் செய்வது மட்டும் சரி, மற்ற எல்லோரும் செய்வது தவறு என்பதே இதில் ஒளிந்திருக்கும் உண்மை. ஒரு இயல்பான மனிதன், தன் வாழ்க்கை மிகச்சரியானதாக இருக்காது என்பதை ஏற்றுக் கொள்வார். நாம் செய்வதற்கு வரையறை உண்டு என்பதை உணர்ந்திருப்பார். அதனால் மிகச்சரியானவனாக இருக்க முயற்சி செய்யாதீர்கள்.
