ஆன்மிகக் குழப்பம்
கேள்வி : ஸ்ரீராமருக்குத் தெரியாதது எதுவுமில்லை. அப்படியிருக்கும்போது எதற்கு ராவணனிடம் உபதேசம் பெறச் சொல்கிறார். கெட்ட செயல்கள் செய்த ராவணன் அறிவுரைகளை கடைப்பிடிக்கலாமா..?
- என்.பக்தவத்சலம், சென்னை.
ஞானகுரு :
இதிகாசப்படி ராவணன் மகாபலம் பொருந்திய அரசன். மிகப்பெரும் ஞானி. நான் என்ற அகந்தையால் மட்டுமே வீழ்ந்தவன். அதனாலே போர்க்களத்தில் ராவணன் வீழ்ந்து கிடந்தபோது, அவண்டம் உபதேசம் பெற்றுவருமாறு லட்சுமணனை அனுப்புகிறார் ராமன்.
அப்போது இராவணன் கூறியதாக சொல்லப்படும் முக்கிய உபதேசங்கள் இவை:
1. நல்லது செய்ய நினைத்தால் உடனே செய்து விடு. நான் சீதையை திருப்பி அனுப்ப வேண்டும் என்று பலமுறை எண்ணினேன். ஆனால் ‘பிறகு பார்க்கலாம்’ என்று தள்ளிக்கொண்டே போனதே என் அழிவுக்குக் காரணமானது.
2. தவறான எண்ணம் மனதில் வந்தவுடனே அதை நிறுத்திவிட வேண்டும். நான் கட்டுப்படுத்தாத அகந்தை என்னை அழித்தது. என்னை யாராலும் வெல்ல முடியாது என்ற கர்வமே என்னை வீழ்த்தியது.
3. நல்லவர்கள் ஆலோசனையை புறக்கணிக்கக்கூடாது. விபீஷணன், மண்டோதரி, பல அமைச்சர்கள் கூறிய அறிவுரையை நான் கேட்கவில்லை என்பதாலே வீழ்ச்சியடைந்தேன். குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.
4. தொடர்ந்து வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என எண்ணாதே. பெரிய அரசன், பெரிய வீரன், பெரிய ஞானியும் இறுதியில் மண்ணாகிறான்.
5. சாரதி, வாயிற்காப்பாளி, சகோதரனிடம் பகை கொள்ளாதே, உடனிருந்தே கொல்வர். எதிரியை எளியவன் என்று எடை போடக்கூடாது.
மரணத் தருவாயில் யாரும் கெட்டவராக இருப்பதில்லை. எனவே, இந்த கருத்துக்களை ஒரு தீயவன் கருத்தாகப் பார்க்காமல், ஒரு ஞானியின் கண்ணோட்டத்தில், நல்லதை உடனே செய். கெட்டதை உடனே கைவிடு. அகந்தையை ஒருபோதும் வளர்க்கவேண்டாம்’ என்றே பார்க்கவேண்டும்.
ஒருவரது தவறு, அவரது வாழ்வை எப்படிச் சிதைத்தது என்பதற்கு ராவணன் ஒரு சிறந்த உதாரணம். அவர் செய்த தவறை மறந்து அவர் கற்றுக் கொடுத்த பாடத்தை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள்.
