உடல் இன்பமே ஆனந்தம்

உளவியல் உண்மை

உலகில் உள்ள அத்தனை மதங்களும் காமத்தை ஒரு பாவமாகவே கருதுகின்றன. கோயில்களில் ஆபாச சிலைகள் வடிக்கப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இல்லற வாழ்க்கையைத் துறந்து சன்யாச மனப்பான்மைக்கு மாறிவிட வலியுறுத்துகிறது இந்து மதம். கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் காமத்தைப் பெரும் பாவமாகக் காட்டுகின்றன. இந்து மத சந்நியாசிகளும், கிறிஸ்தவ பாதிரியார்களும் திருமணம் முடிக்காமல் இன்பத்தை வெறுப்பதற்குக் கற்றுத் தருகிறார்கள்.

அதாவது, இயற்கையாக மனித உடலில் தோன்றும் உணர்வுகளை மதங்கள் குழி தோண்டிப் புதைக்கச் சொல்கின்றன. பெண் உடலுக்காகவே பல போர்கள் நடந்துள்ளன என்று காரணம் சொல்கின்றன. அதிகாரத்துக்காகவும், ஆணவத்துக்காகவும் போர்கள் நடந்தன என்பதே உண்மை.

ஆசை என்பது வேஷமல்ல

பசியும் காமமும் மனித உடலுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். எனவே, இவற்றைத் தவிர்க்க முடியாது. வயிற்றுப் பசி போலவே உடலுக்கும் பசி எடுக்கும். எனவே, இன்பம் அனுபவிப்பதில் தவறு இல்லை. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இந்த இன்பத்தை அடக்கவும் அவசியம் இல்லை. எதையாவது உண்டு வயிற்றுப் பசியை அடக்கிக்கொள்வது போன்று, சுயமாகவே உடல் பசியையும் அடக்கிக்கொள்ளலாம். புரிந்துகொண்ட துணை இருக்கும் பட்சத்திலும் மரணம் வரையிலும் இன்பம் அனுபவிக்கலாம்.

காதலைக் கொண்டாடும் சமூகம் காமத்தை வெறுப்பது தான் ஆச்சர்யம். இரண்டுமே உடல் சார்ந்த வேட்கை. ஹார்மோன் விளையாட்டு. காதலின் ஆரம்பமும் முடிவும் காமம் என்பதே உண்மை. இலவசமாகக் கிடைக்கும் மகிழ்ச்சியை எந்த குற்றவுணர்ச்சி இன்றியும் அனுபவியுங்கள். உடலில் எந்த ஒரு மதத்திற்கும் உரிமை இல்லை. பாலுணர்வு பாவம் இல்லை.

இந்த  உலகில் மனிதன் மட்டுமே குழந்தை பெறுவதைத் தாண்டியும் காமத்தை ஆனந்தத்திற்கு பயன்படுத்துகிறான்.  சந்தோஷம், ஆனந்தம் தரும் எதுவும் தவறு இல்லை.அதேநேரம் காமத்துக்கு பிறரை இரையாக்கவோ அல்லது பிறரது இரையாகவோ மாறிவிடாதீர்கள். பரஸ்பரம் அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment