ஞானகுரு தத்துவம்
அறிவாளின்னு புகழ்ந்தால் மகிழ்ச்சி அடையுறாங்க. ஞாநின்னு சொன்னால் கிண்டல் செய்வதாக நினைக்கிறார்கள். உண்மையில் அறிவை விட ஞானம் பெரிது.
புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது என்று படித்திருப்பீர்கள். அப்படியென்றால் அதுவரை அவர் எப்படியிருந்தார்..? நிறைய குழப்பத்துடன் இருந்தார். இளவரசனாக நிறைய செல்வம், நிறைய அதிகாரம் இருந்தாலும் மனிதர்களின் துன்பத்தைத் தீர்க்கும் வழி தெரியவில்லை என்ற கவலையில் இருந்தார். துன்பத்திற்கு விடை தேடும் ஆர்வத்துடன் இருந்தார். அவருக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது. அதாவது ஞானம் எனப்படும் தெளிவு கிடைத்தது.
ஏன் அறிவை விட ஞானம் பெரிது தெரியுமா..?
எல்லா மனிதர்களுக்கும் அறிவு உண்டு. அறிவு என்பது கற்றுக்கொள்வதன் மூலம் கிடைக்கிறது. அதாவது பெற்றோர், ஆசிரியர், புத்தகம், தொலைக்காட்சி, இணையம் மூலம் ஒருவருக்குக் கிடைப்பது அறிவு. குறிப்பிட்ட துறையில் ஆய்வுகள் செய்து டாக்ட்ரேட் பட்டம் வாங்கியவர் என்றால், அந்த துறையில் நிரம்பிய அறிவு பெற்றவர் என்று அர்த்தம்.
எது தெளிவு?
அறிவின் மூலம் ஒருவர் நல்ல வேலை, நிறைய பணம், அழகான குடும்பம் அமைத்துக்கொள்ள முடியும். ஆனால், நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்றால் அவருக்குத் தெளிவு வேண்டும். தெளிவை யாரும் யாருக்கும் கற்பிக்க முடியாது. அவர்களே அவர்களைப் பற்றி தெளிவு அடைய வேண்டும்.
தன்னை உணர்ந்தவர், தன்னை அறிந்தவர் மட்டுமே தெளிவடைய முடியும். தன்னுடைய உடல், மனதின் ஆற்றல் எந்த அளவுக்குச் செயல்படும், எந்த விஷயத்துக்குக் கவலைப்பட வேண்டும், எதை விட்டுக்கொடுக்க வேண்டும், எதை கட்டுப்படுத்த முடியாது என்பது புரியும். எனவே, அறிவாளியாக இருப்பது மட்டுமின்றி தெளிவாகவும் மாறுங்கள். அப்போது தான் இந்த பிரபஞ்சத்தில் மனித வாழ்க்கையின் அர்த்தம் புரியும். தெளிவு அடைந்த எல்லோரும் ஞானி ஆகலாம். ஞானி ஆன அனைவரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெறலாம். நீங்களும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
