குழந்தைக்கு பெயர் சூட்டும் சூட்சுமம்

சக்சஸ் ஃபார்முலா

கல்யாணம் முடித்ததும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு ரொம்பவே கவலைப்படுகிறார்கள். கர்ப்பமான தினத்திலிருந்து குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்ற கவலையிலே வாழ்கிறார்கள். குழந்தை பிறந்ததும், அதற்கு ஒரு நல்ல  பெயர் சூட்டுவதற்கு பெற்றோர் ரொம்பவே சிரமப்படுகிறார்கள். பிறந்த நேரம், நட்சத்திரம், ராசி, பெற்றோர் பெயரில் சில எழுத்துக்கள் என்று எல்லாம் கலந்து பெயர் சூட்டுவதற்குத் திட்டமிடுகிறார்கள். நியூமரலாஜி, நேமாலஜி எல்லாம் பார்த்து, அந்த பெயரில் தான் பிள்ளையின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறார்கள்.

யார் இந்த ஜோதிடர்?

உண்மையில், ஜோதிடரைத் தவிர வேறு யாரும் பெயருக்கு முக்கியத்துவம் தருவதில்லை. பேருக்கும் வெற்றிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை ஏராளமான ஆய்வுகள் நிரூபித்துவிட்டன. கோடீஸ்வரன் என்று பெயர் வைத்தவர்கள் கூலி வேலை செய்கிறார்கள். வைத்தீஸ்வரன் என்று பெயர் வைத்தவர்கள் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

எனவே, பெயர் வைப்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மட்டும் பாருங்கள். மனிதனைத் தவிர எந்த உயிரினமும் பெயர் சூட்டிக்கொள்வதில்லை. பேர் வைத்தாலும் அந்த பெயரைச் சொல்லி பெற்றோரே கூப்பிடுவதில்லை. குட்டி, செல்லம், தம்பி, லட்டு, பாப்பா என்று குழந்தையாக இருக்கும்போது செல்லமாக அழைக்கிறார்கள். அட்டெனன்ஸ் ரிஜிஸ்தரில் இருந்தாலும்  பள்ளியில் நண்பர்கள் பட்டப்பெயர் சொல்லியே கூப்பிடுவார்கள்.  வளர்ந்ததும் மாமா, மாமி, சித்தப்பா, சித்தி, மதினி, அக்கா, அண்ணன், தம்பி, அப்பா, அம்மா என்று உறவுச் சொல் கிடைத்துவிடும். வேலைக்குப் போகும் இடத்தில் சார், மேனேஜர், கிளர்க், சூப்பர்வைசர் என்றே அழைக்கப்படுவார்கள்.

வயதாகிவிட்டால் பெருசு, கிழடு என்பது அடையாளமாகிவிடும். இறந்தவுடன் பாடி எப்ப வரும்..? என்றுதான் கேட்பார்கள்.  செத்துப்போய் திரும்பிவந்தால் ஆவி என்று விரட்டுவார்களே தவிர, பேர் சொல்லி கூப்பிட மாட்டார்கள். அதனால் எந்த ஜோதிடம், ஆன்மிகம் என்றெல்லாம் பார்க்காமல் மனதுக்குப் பிடித்த பேரை தேர்வு செய்யுங்கள். குழந்தைகள் அந்த பெயரை நினைத்து மகிழ்ச்சி அடையும் வகையில் பேர் இருக்கட்டும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment