எல்லோருக்கும் வரும் கேள்வி
எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் பிரச்னை வருகிறது, என்னைப் போன்று வேறு யாருக்கும் துன்பம் இல்லை என்று தான் உலகில் பெரும்பாலான மனிதர்கள் வருத்தப்படுகிறார்கள். இப்படி எண்ணம் வரும்போது மனதை திடப்படுத்திக் கொள்வதற்கு இதிகாசத்தில் ஒரு நல்ல பதில் இருக்கிறது. மகாபாரதத்தை நம்புகிறீர்களோ இல்லையோ, இந்த சம்பவத்தைப் படியுங்கள்.
பாண்டவர் பக்கம் சேரும்படி கூறும் கிருஷ்ணரிடம் கர்ணன், ‘’பிறந்ததும் என் தாயார் என்னைப் புறக்கணித்து ஆற்றில் விட்டார். முறைதவறிப் பிறந்த குழந்தை என்று என்னை ஒதுக்கினார்கள். நான் சத்ரியன் இல்லை என்று துரோணாச்சாரியார் கல்வி கற்றுத்தராமல் புறக்கணித்தார். கலைகளைக் கற்றுக்கொடுத்த பரசுராமரே நான் பொய் சொன்னதற்காக எனக்கு சாபமும் கொடுத்தார். தற்செயலாக என் அம்பு பசு தாக்கப்பட்டதற்கும் நான் சபிக்கப்பட்டேன். திரௌபதியின் சுயம்வரத்தில் தேரோட்டியின் மகன் என்று அவமானப்படுத்தப்பட்டேன். அர்ஜூனனைக் காப்பாற்றவே தாய் குந்தி இங்கு வந்தார். எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம்’’ என்று கேட்டார்.
துன்பங்களின் பிள்ளை கிருஷ்ணன்
அதற்கு கிருஷ்ணன் கூறிய பதில் என்ன தெரியுமா..?
“கர்ணா நீயாவது பரவாயில்லை… நான் சிறையில் பிறந்தேன். பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. பிறந்த அன்றே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டேன். நான் நடை பயிலும் முன்பாகவே என்னைக் கொல்வதற்கு பல முயற்சிகள் நடந்தன. சின்ன வயதில் எனக்கு படிப்பு கிடைக்கவில்லை. 16 வயதில் தான் குருகுலத்தில் சேர்ந்தேன். நான் விரும்பிய பெண்ணை, என்னை விரும்பிய பெண்ணைக் கூட என்னால் திருமணம் செய்ய முடியவில்லை. ஆனால், கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்ய வேண்டி வந்தது. ஜராசந்தனிடமிருந்து என் மக்களைக் காப்பதற்காக ஊரையே நகர்த்திப்போன கோழை நான். இந்த குருஷேத்திர யுத்தத்தால் தர்மருக்கு அல்லது துரியோதனனுக்கு நாடு கிடைக்கும், எனக்கு என்ன கிடைக்கும்? ஆனாலும், என்னையே போருக்குக் காரணம் என்கிறார்கள்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் சவால் இருக்கும். யாருக்கும் வாழ்க்கை எளிதானது அல்ல. எத்தனை முறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல, எப்படி மீண்டுவந்தோம் என்பதே முக்கியம்’’ என்றார்.
நமக்கு மட்டும் தான் இத்தனை துன்பம் என்று இனிமேலும் வருந்தாதீர்கள். கண்ணன், கர்ணனை விட யாருக்கும் துன்பத்தை உலகம் கொடுத்துவிடாது. நம்பிக்கையுடன் எழுந்து நில்லுங்கள், மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
