மருந்து இல்லாமல் தூங்கும் டெக்னிக்

ரிலாக்ஸ் கற்பனை

மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு 6 முதல் 8 மணி நேரம் நல்ல தூக்கம் முக்கியம். கடுமையான நோய் பாதிப்பு, கவலைகளில் இருந்தும் விடுதலை தரும் மருந்து தூக்கம். மாத்திரை போட்டும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் விரைவில் தூங்குவதற்கான ஒரு டெக்னிக்கைப் பார்க்கலாம்.

தூங்கும் இடத்தில் மல்லாந்து படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொள்ளுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த இடத்தில் தனியே படுத்திருப்பதாக கற்பனை செய்யுங்கள். அது, மொட்டை மாடியாக, புல்வெளியாக, தாயின் அருகில் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

காற்றில் மிதக்கலாம்

நன்றாக ஆழ்ந்து சுவாசத்தை உள்ளே இழுத்து நிதானமாக வெளியே விடுங்கள். ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் இதனை செய்து மூச்சு சீரானதும் நிறுத்துங்கள். அதன் பிறகு உடம்பை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். முதலில் கால் பெருவிரலைத் தளர்த்துங்கள், அடுத்து உள்ளங்கால் என்று நிதானமாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் கற்பனையாக ரிலாக்ஸ் ஆக்குங்கள். கழுத்து, முகம், நாக்கு, கண்கள், காது தலை முடி என முற்றிலுமாக வரையிலும் தளர்த்துங்கள். இப்போது ரிலாக்ஸ் ஆக உங்களுக்குப் பிடித்த இடத்தில் படுத்திருக்கிறீர்கள்.

கண்கள் மூடியபடி நிதானமாக மூச்சை ஐந்து நொடிகள் உள்ளே இழுத்து, அடுத்த ஐந்து நொடிகள் முச்சை நுரையீரலில் வைத்திருந்து, அடுத்த ஐந்து நொடிகளில் வெளியே விடுங்கள். ஒன், ட்டூ, த்ரி, ஃபோர், ஃபைவ் என்று மனதில் எண்ணிக்கொண்டு இதனை செய்துகொண்டே இருங்கள். பத்து முறை இதனை செய்வதற்குள் தூக்கம் உங்களைத் தழுவிக் கொள்ளும்.

ஆரம்ப காலத்தில் தூக்கம் வருவதற்கு பத்துக்கும் மேற்பட்ட முறை பயிற்சி செய்யத் தேவை இருக்கலாம். பின்னர் மூன்று அல்லது நான்காவது மூச்சுப் பயிற்சியிலே தூக்கம் வந்துவிடும். இந்த பயிற்சி தூக்கம் வரவழைக்கும் மெலடோன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. நன்கு தூங்குங்கள், மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment