ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : கணவன், மனைவிக்குள் இணக்கம் வர என்ன செய்யலாம்..?
- பி.சுந்தரி மணிவண்ணன். ஆத்தூர்.
ஞானகுரு :
கணவன்–மனைவிக்குள் இணக்கம் என்பது தானாக உருவாவது இல்லை, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துதல், விட்டுக்கொடுத்தல், மரியாதை கொடுப்பதன் அடிப்படையில் உருவாகும்.
புரிதல் இல்லமைக்கு முக்கிய காரணம் பேசாமல் இருப்பதுதான். தினமும் சில நிமிடங்களாவது ஒருவருடன் ஒருவர் மனம் திறந்து பேசுங்கள்.
எப்போதும் தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டினால் மனக்கசப்பு அதிகரிக்கும். சிறிய நல்ல செயல்களைக்கூட பாராட்டும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
கோபம் வரும்போது அமைதியாக இருந்து பிறகு பேசுவது நல்லது. நான்தான் சரி என்ற எண்ணம் உறவை பாதிக்கும். சில நேரங்களில் வெற்றி பெறுவதைவிட உறவைப் பாதுகாப்பதே முக்கியம்.
உணர்வுகளை அலட்சியப்படுத்தாமல் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு மற்ற குடும்பங்கள், நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஒப்பிடுவது தேவையற்ற மனவருத்தத்தை உருவாக்கும்.
சந்தேகம் உறவை பலவீனப்படுத்தும். வெளிப்படையான பேச்சும் நேர்மையும் நம்பிக்கையை அதிகரிக்கும். ஒரு புன்னகை, ஒரு நன்றி, ஒரு அக்கறையான வார்த்தை கூட உறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
மகிழ்ச்சியான தம்பதிகள் சண்டையே போடமாட்டார்கள் என்பதல்ல; சண்டைக்குப் பிறகும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இணைந்து வாழ்வார்கள்.
