ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : தூக்கம் கண்களைத் தழுவ ஏதேனும் சுலபமான வழி இருக்கிறதா..?
- ஏ.சரவணன், ஸ்ரீரங்கம்.
ஞானகுரு :
தூக்கத்துடன் சண்டையிடுவது, தூக்கத்திற்கு ஆசைப்படுவது, தூக்கத்திற்கு ஏங்குவது, தூங்கவில்லை என்று வருந்துவது எல்லாமே தூக்கத்தின் எதிரிகள்.
குறிப்பிட்ட நேரத்தில் படுக்கையில் படுப்பது என்ற பழக்கம் வந்துவிட்டாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் தூக்கம் வரவில்லை என்றாலும் படுத்துக்கிடங்கள். மனதில் பாசிடிவ் எண்ணங்களுடன் சிந்தனை செய்யுங்கள். பிடித்த சினிமா, பழைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான எண்ணங்கள், நெருங்கிய உறவினர்களின் சேட்டைகளை நினைத்துப் பாருங்கள்.
சின்ன வயதில் இருந்து உங்களுடன் படித்தவர்களின் பெயர்களை யோசித்துப்பாருங்கள். சிந்தனை முடிவதற்குள் தூக்கம் வந்துவிடும். அதேபோல், காலையில் இன்னும் கொஞ்சம் தூங்கலாமா என்று யோசிக்கும்போதே எழுந்துவிடுங்கள். அப்போதுதான் இரவு சீக்கிரம் தூக்கம் வரும்.
…………………..
கேள்வி : வாழ்வை மேம்படுத்துவது கல்வி அறிவா… அனுபவ அறிவா?
- டி.மணிராஜன், ஶ்ரீவில்லிபுத்தூர்.
ஞானகுரு :
முன்னோர்கள் அனுபவ அறிவுடன் மட்டுமே வாழ்க்கை நடத்தினார்கள். இதுவே போதும் என்றாலும் மேம்பட்ட வாழ்க்கைக்கும், உலகம் முழுக்க சுற்றிவரவும் அது போதாது.
பிள்ளைகளை சரியாக வழிநடத்த வேண்டும் என்றால் கல்வி அறிவும் முக்கியம். அதனால் எவ்வளவு முடியும் அவ்வளவு கற்றுக்கொள்ளுங்கள். அதன்பிறகு அனுபவ அறிவை பெற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை சுலபமாகிவிடும்.
