ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதற்கு அளவுகோல் இருக்கிறதா?
- டி.பூவை வசந்தா, வத்றாப்.
ஞானகுரு :
குழந்தைகளிடம் முடியாது, இல்லை ஆகிய இரண்டு வார்த்தைகளை மந்திரம் போன்று பெற்றோர் அடிக்கடி உச்சரிக்க வேண்டும். பிடிவாதம் செய்யும்போது, முடியாது என்று உறுதியாகச் சொல்லுங்கள். அதிகம் ஆசைப்பட்டால், இல்லை என்று சொல்லுங்கள்.
ஒருவரது சுதந்திரம் அடுத்தவரை பாதிக்கக்கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள். அடுத்த குழந்தைகளை அடிப்பது, பிறர் வீட்டுப் பொருட்களில் உரிமை கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்கவேண்டாம்.
எத்தனை அன்பு காட்டுகிறீர்களோ, அதே அளவுக்கு எல்லைக் கோடு இருக்க வேண்டும். அந்த எல்லைக்கோடு எதுவென பிள்ளைக்குப் புரியவைப்பதுதான் பெற்றோருக்கு அழகு.
…………….
கேள்வி : இந்த வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய மகிழ்ச்சி எது..?
- எம்.முத்துராஜ், பாரதிநகர்.
ஞானகுரு :
விரும்பியதை சாப்பிடுவது, சாப்பிட்ட உணவு ஜீரணிப்பது, படுத்ததும் தூக்கம் வருவது ஆகிய மூன்றும் ஆரோக்கியமான மனிதர்களின் சொத்து. இந்த மூன்றில் எது ஒன்று இல்லை என்றாலும் அவர் ஏழை. மூன்றும் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்.
