திறமையாளருக்கு இயற்கை உதவுமா..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி :  பிறப்பில் எது சிறப்பு, இறப்பில் எது சிறப்பு..?

  • டி.மனோகரன், விராலிமலை.

ஞானகுரு :

அகல் விளக்காக மனித வாழ்வு அமைவது சிறப்பு. தீபம் ஏற்றுவது போன்று பிறப்பு நிகழ வேண்டும். எரியும்வரை இருள் அகற்றி வழிகாட்ட வேண்டும். இறப்பு எனும் தீபம் அணையும்முன்பு… வேறு ஒரு தீபம் ஏற்றப்பட வேண்டும். வழிகாட்டுவது பிறப்பின் சிறப்பு என்றால்… அந்த வழிகாட்டுதல் என்றென்றும் தொடரச்செய்வதே இறப்பின் சிறப்பு.

……………….

கேள்வி : வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லோரும் புத்திசாலியா…? இயற்கை திறமையாளர்களுக்கு உதவி செய்கிறதா..?

  • பி.கோகிலா, வேடசந்தூர்.

ஞானகுரு :

புத்திசாலித்தனம், வெற்றி, மரணம், போராட்டம் என்பதெல்லாம் இயற்கைக்கு முன் ஒன்றுமே இல்லை என்பதைச் சொல்வதற்கு ஒரு குட்டிக் கதை.

நாட்டின் தலைசிறந்த ராணுவ வீரர்களை உள்ளடக்கிய கமாண்டோ படை ஒன்று உருவாக்கப்பட்டது. உளவு, திட்டமிடுதல், சுவர் தாண்டுதல், துப்பாக்கி திறன், வெடிகுண்டு நிபுணத்துவம் என ஒவ்வொரு நபருக்கும் பிரத்யேக தனித்திறமை உண்டு. பல நேரங்களில் அந்த கமாண்டோ குழுவினர் சாகசம் செய்து மக்களைக் காப்பாற்றினார்கள். எனவே, அங்கிருந்த அனைவரும் திறமைசாலிகள், புத்திசாலிகள் என்று பாராட்டப்பட்டனர். அந்தக் குழுவில் எப்போதும் கடைசி இடம் பிடிப்பவன் நேசன்.

ஒரு கூடாரத்தில் அனைவரும் ஒன்று கூடி, வெளிநாட்டு தீவிரவாதக் கும்பலை மடக்குவதற்கு திட்டம் தீட்டப்பட்டது.  டீ ஏற்பாடு செய்து கொண்டுவருமாறு நேசனுக்கு உத்தரவிட்டனர். உடனே நேசன் அந்த கூடாரத்திலிருந்து வெளியேறி சமையல்காரர் இருந்த இடத்துக்குப் போனான்.

அந்த நேரம் ஒரு அசம்பாவிதம் நடந்தது. கமாண்டோக்கள் தங்கியிருந்த கூடாரம் மீது எதிரிகள் திடீரென வந்து வெடிகுண்டுகள் வீசிவிட்டு தப்பியோடினார்கள். அத்தனை வீரர்களும் உயிர் இழந்தார்கள். அவர்களில், தப்பிப் பிழைத்தவன் நேசன் மட்டுமே.

இங்கு யார் திறமையாளர்.. யார் புத்திசாலி என்றெல்லாம் எதையும் கணிக்க முடியாது. இயற்கை விசித்திரமானது.

Leave a Comment