ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : பணத்திமிர் எப்போது அடங்கும்..?
- வி.முனியசாமி, காளையார்கோயில்.
ஞானகுரு :
மனிதன் படைப்பில் அதிஉன்னதமானது பணம். கடவுள் போன்று அதீத சக்தி வாய்ந்த ஆயுத. கேட்டதை எல்லாம் கொடுக்கும் சக்தி வாய்ந்தது.
அதேநேரம் பணம் மனிதனுக்கு வசதியைத் தரலாம்; ஆனால் அது நிரந்தரமான அதிகாரம், பாதுகாப்பு தராது. இதை உணராதவர்களுக்கு பணத்திமிர் உருவாகிறது.
இன்று கையில் இருக்கும் பணம் நாளை வேறு ஒருவரிடம் போய்ச் சேரலாம். பணம் நிலையற்றது என்பதை அனுபவம் கற்றுக்கொடுக்கும் போது பணத்திமிர் அடங்குகிறது.
பணத்தால் அன்பு, பாசம், நட்பு ஆகியவற்றை வாங்க முடியாது என்ற அருமை புரியும்போது அகங்காரம் குறையும். நோய், முதுமை, மரணம் போன்ற வாழ்க்கை உண்மைகளை எதிர்கொள்ளும்போது. மனிதன் எவ்வளவு செல்வந்தனாக இருந்தாலும் இவற்றிலிருந்து முழுமையாக தப்ப முடியாது.
தன்னை விட உயர்ந்தவர்களையும், திறமையானவர்களையும் சந்திக்கும்போது. உலகம் மிகப் பெரியது என்பதும், தாம் எல்லாம் அறிந்தவர் அல்ல என்பதும் புரியும்.
உண்மையில், பணத்திமிர் அடங்குவது பணம் குறைந்ததால் அல்ல; வாழ்க்கையைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும் போது தான். பணம் கையில் இருப்பது தவறல்ல. ஆனால் பணம் மனதில் ஏறிவிட்டால் அதுவே பிரச்சினையாகிறது. பணம் வாழ்க்கையை உயர்த்தலாம். ஆனால், பணிவுதான் மனிதனை உயர்த்தும்
………………..
கேள்வி : தாய்மையை போற்றுவது எதனால்..?
– எம்.ராஜசேகர், தூத்துக்குடி.
ஞானகுரு :
பெண் மட்டுமல்ல இந்த உலகிலுள்ள அத்தனை மிருகங்களும், பறவைகளும் தாய்மை அடைகின்றன. அதனால் தாய்மை அடைவதால் மட்டும் தாய்க்குப் பெருமை கிட்டுவதில்லை.
பிள்ளை ஒரு கவளம் சோறு மிச்சம் வைத்துவிட்டால், வயிற்றில் என்ன பிரச்னையோ என்று வருத்தப்படுபவள் தாய். தான் பெற்றெடுத்த பிள்ளை நல்லவன் என்றாலும், கெட்டவன் என்றாலும், தன் மரணம் வரையிலும் தன் நெஞ்சில் வைத்து உயிர் போன்று பாதுகாப்பவள் தாய். பெண் தவிர வேறு எந்த உயிரினமும் வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்ட தியாகம் செய்வதில்லை. தன்னலம் மறந்து பிள்ளை நலம் பேணுவதாலே பெண் என்றென்றும் போற்றுவதற்குரியவள் ஆகிறாள்.
