ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : இப்போது பலரும் வாக்கு தவறி நடக்கிறார்களே, ஏன் எதற்காக?
- பி.ராஜபாண்டி, மணிநகரம்.
ஞானகுரு :
ஒரு மனிதரின் நாணயத்தை அவர் சொல்லும் வார்த்தையே முடிவு செய்கிறது. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் உறுதியாக நிற்பவர், எப்போதும் நேர் வழியில் செல்பவராக இருப்பார். பொறுப்புகளை எடுத்துக்கொள்பவராக இருப்பார்.
அதேநேரம், ஏமாற்றும் நோக்கத்திலே வாக்கு கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லா நேரத்திலும் குறுக்கு வழியை மட்டுமே தேர்வு செய்கிறார்.
வாக்கு தவறுவது மனித இயல்பின் ஒரு பகுதி. ஏனென்றால் பொருளாதார பிரச்சினை, உடல்நலக் குறைவு, குடும்பப் பொறுப்பு, வேலை அழுத்தம் போன்றவை காரணமாக கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போய்விடலாம்.
ஆனால் தவறிய வாக்கை ஒப்புக்கொண்டு, அதற்குப் பொறுப்பேற்று, மீண்டும் நம்பிக்கையை உருவாக்க முயல்வது முதிர்ச்சியின் அடையாளம். வார்த்தைகளால் அல்ல, தொடர்ந்து செய்யப்படும் செயல்களால்தான் உண்மையான நம்பிக்கை உருவாகிறது.
…………….
கேள்வி : நிம்மதியாக இரவில் தூங்குவதற்கு சிம்பிள் வழி இருக்கிறதா..?
- ஏ.பிச்சை, ஶ்ரீவில்லிபுத்தூர்.
ஞானகுரு :
எத்தனை பெரிய துன்பத்தில் இருக்கும் மனிதனுக்கும், மாபெரும் ஆறுதல் தரக்கூடியது உறக்கம். ஆனால் உறக்கத்தை தேடித் தேடி விரட்டுபவர்களுக்கு அது கண்ணாமூச்சு காட்டுகிறது.
ஒவ்வொரு நபரின் உடலைப் பொறுத்தே அவர் தூங்க வேண்டிய நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, உடலுக்குத் தேவையான உறக்கத்தை அதுவே கேட்டு பெற்றுக்கொள்ளும். கண்களைத் தூக்கம் தழுவும் வரையிலும் ஏதேனும் செய்துகொண்டிருங்கள். அதற்காக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுடன் விளையாடிக் கொண்டிருக்க வேண்டாம், அது தூக்கத்திற்கு கேடாகிவிடும்.
இசை கேட்பது, புத்தகம் படிப்பது, பிடித்தவர்களுடன் மனம் விட்டு பேசுவது, பழைய ஆல்பம் புரட்டுவது என்று எதையாவது செய்துகொண்டு இருங்கள். தூக்கம் உங்களைத் தேடி வரட்டும். அப்படியும் தூக்கம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். கண்களை மூடி வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை மட்டும் நினைத்துக்கொண்டே இருங்கள். படுத்தபடியே மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். உங்களை அறியாமலே தூங்கி விடுவீர்கள்.
