குலதெய்வ வழிபாடு எத்தனை முக்கியம்..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : வாழ்வின் சங்கடங்களிலிருந்து எப்படி விலகிச் செல்வது?

  • டி.அனிதா, பாலக்காடு.

ஞானகுரு :

சங்கடத்திலிருந்து எப்படி தப்புவது அல்லது விலகுவது என்று யோசிப்பது சரியான தீர்வு இல்லை. இந்த சங்கடத்துக்கு யார் காரணம் அல்லது எது காரணம் என்பதை ஆராய்ந்து உண்மையைக் கண்டுகொள்வதே முக்கியம்.

 பிரச்னைக்கு உரிய ஆரம்பப்புள்ளியை அறிந்துகொண்டால், சங்கடங்களில் இருந்து தப்பிக்கும் வழியையும் அறிவது எளிது. ஆனால், ஒரு சங்கடத்தில் இருந்து விலகினாலும், அடுத்து ஒன்று வரத்தான் செய்யும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். சங்கடங்களை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தெரிந்துவிட்டால், இனியெல்லாம் சுகமே.

………………..

கேள்வி : குலதெய்வ வழிபாடு பற்றி சுருக்கமாக சொல்லுங்கள்?

  • சி.சுந்தர், பாண்டியன்நகர்.

ஞானகுரு:

தந்தைவழி முன்னோர்களைக் கும்பிடுவது குலதெய்வ வழிபாடாக கருதப்படுகிறது. மானம் காப்பதற்கு தியாகம், வீரமரணம், தற்கொலை, கொலை என உயிர் விட்டவர்களே பெரும்பாலான குலதெய்வங்களாக இருக்கின்றனர். இவர்கள் பேயாக, பிசாசாக மாறி குடும்பத்தினரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தொடங்கியதே இந்த வழிபாடு.

பயத்தில் தொடங்கப்பட்ட இந்த வழிபாடு, இப்போது கூட்டாஞ்சோறு சாப்பிடவும், சொந்த சாதியை வளர்க்கவும் பயன்படுகிறது. வரலாறு படிக்கவேண்டியது மட்டுமல்ல பாதுகாக்கவும் வேண்டியதுதான். ஆனால் வழிபடும் அளவுக்கு முன்னோர்களுக்கு மதிப்பு தர அவசியம் இல்லை.

குலதெய்வத்தை வணங்காவிட்டால் எந்த காரியமும் உருப்படாது, குலதெய்வமே முதல் தெய்வம், குலதெய்வம் கோபப்பட்டால் சர்வ நாசம் என்றெல்லாம் சொல்லப்படுபவை கட்டுக்கதைகள். கும்பிட்டால் மட்டுமே நல்லது செய்யும் என்றால், அது தெய்வமாக இருக்க முடியாது. எனவே, சொந்தங்கள், உறவுகள் சந்திப்பாக மட்டும் குலதெய்வ வழிபாடு இருக்கட்டும்.  

Leave a Comment