ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : சித்தர்கள் இந்த உலகில் வாழ்கிறார்களா..?
- எம்.பாலாஜி, இராஜபாளையம்.
ஞானகுரு :
சித்தர்கள் மரமாக, மலராக, மழையாக, மலையாக இன்னமும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சித்தர் தரிசனம் கொடுத்ததாக எத்தனையோ பேர் சொல்வார்கள்.
சித்தர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் ஞானத்தை வாழ்க்கையில் பயன்படுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். சித்தர் பாடல்கள் மனித மனம், உடல்நலம், தியானம், வாழ்க்கை நெறி ஆகியவற்றைப் பற்றிய ஆழமான கருத்துகள் உள்ளன. சித்தர்களின் கருத்துக்களில் மூழ்கினால் நீங்களும் சித்தராக மாறிவிட முடியும்.
………………………….
கேள்வி : முகத்தைப் பார்த்து ஒருவரின் வாழ்க்கையைக் கணித்து ஆருடம் சொல்ல முடியுமா?
- ஏ.சுந்தரி, வாணியம்பாடி.
ஞானகுரு :
ஏமாற்றுவது என்று முடிவெடுத்துவிட்டால் எப்படி வேண்டுமானாலும் ஜோசியம் சொல்ல முடியும். கிளியும் எலியும் ஜோதிடம் சொல்கிறது. கை ரேகையைப் பார்த்து ஜோதிடம் சொல்கிறார்கள். கையெழுத்தைப் பார்த்து ஜோதிடம் சொல்கிறார்கள். பெயர் ஜோதிடம் பார்க்கிறார்கள். சிலர் நாடி ஜோதிடம் பார்க்கிறார்கள். அதாவது, இந்த உலகில் பிறந்த அத்தனை குழந்தைக்கும் நாடி ஜோதிடம் எழுதப்பட்டு இருக்கிறதாம். இத்தனை ஜோதிடம் இருக்கும்போது, ஒருவரின் முகத்தைப் பார்த்து கணிக்க முடியாதா என்ன?
உண்மை என்னவென்றால், ஜோதிடம் உண்மை என்று இதுவரை எந்த ஜோதிடரும் அறிவியல்பூர்வமாக நிரூபித்தது இல்லை. அப்படி நிரூபிக்கும் வரை அது உண்மை இல்லை.
