40 வயதிலும் சாதிக்க முடியவில்லையே..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : எனக்கு 40 வயதாகிவிட்டது. இன்னமும் எதையும் சாதிக்கவில்லை. நான் தோல்வி அடைந்த மனிதனா..?

  • கிருஷ்ணமூர்த்தி, ராஜபாளையம்.

ஞானகுரு :

வயது என்பது எண்ணிக்கை மட்டுமே. பார்ப்பவர் கண்ணோட்டத்தில் இது மாறிக்கொண்டே இருக்கும். அதாவது 30 வயதில் திருமணம் முடிக்காதவரை,  இத்தனை அதிக வயதாகியும் திருமணம் முடிக்கவில்லையா என்று கேட்பார்கள். அதே நபர் 30 வயதில் இறந்துவிட்டால், சின்ன வயதில் இறந்துவிட்டார் என்பார்கள். இப்படி கண்ணோட்டத்திற்கு ஏற்ப மாறும் வயது பற்றி கவலைப்பட அவசியம் இல்லை.

அதேநேரம், வயதுக்கும் சாதனைக்கும் தொடர்பே கிடையாது. மகேஷ்பாபு நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக அசத்தினார். மலாலா யூசப்சாப் 17 வயதில் நோபல் பரிசு வாங்கினார். ஸ்டீவ் ஜாப்ஸ் 21 வயதில் கம்ப்யூட்டர் புரட்சியைத் தொடங்கினார். கிரிஸ்டியானோ ரொனால்டோ 18 வயதில் உலகத்தின் கவனத்தை இழுத்த விளையாட்டு வீரராக மாறினார்.

வறுமையிலும் மன அழுத்தத்திலும் இருந்த ஜே.கே. ரௌலிங் 32வது வயதில்தான் ஹாரிபாட்டர் மூலம் புகழ் அடைந்தார். சாமுவேல் எல்.ஜாக்சன் 46 வயதில்தான் புகழ் வாய்ந்த நடிகராக மாறினார்.

கர்னல் சாண்டர்ஸ் அவரது 65 வயதில்தான் கே.எஃப்.சி. தொடங்கி சாதனை புரிந்தார்.   ஜான் கீட்டிங் 69 வயதில் மலை ஏறுவதில் சாதனை செய்தார். 89வது வயதில் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்கத் தொடங்கிய ஃபௌஜா சிங் 100வது வயதில் மாரத்தான் ஓடினார். இப்படி மனித மனதின் சக்திக்கு வயது வரம்பு கிடையாது. எனவே 80 வயதிலும் விரும்பியதை சாதிக்கலாம்

Leave a Comment