ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : டைவர்ஸ் ஆகி பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ முடியுமா..? என்னை விட்டு பிரிந்த கணவர் திருந்திவிட்டதாகச் சொல்கிறார். அவரை நம்பி சேரலாமா..?
- எஸ்.விசாலாட்சி, மதுரை.
ஞானகுரு :
நிறைய பிரிவுகள் போதிய புரிதல் இல்லாமலே நடக்கின்றன. ஈகோ, மூன்றாம் நபர் தலையீடு, புரிந்துகொள்ளும் பக்குவமின்மை, பொறுமையின்மை காரணமாக நடந்த பிரிவு என்றால், அந்த காயம் நிச்சயம் ஆறியிருக்கும். இதற்கு உதாரணமாக மலையாளத் திரை உலகின் பிரபல தம்பதிகளான பிரியதர்ஷன் – லிஸியைச் சொல்லலாம். காதலித்து திருமணம் முடித்து 26 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகள் திடீரென விவாகரத்து செய்து பிரிந்தனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்கிறார்கள்.
அதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்று தெரியுமா?
.“எங்கள் காதல் வாழ்க்கையில் சலிப்பும், அகங்காரமும் வந்தது. ஈகோவுடன் வாழ்வது கடினமாக இருந்ததால் பிரிந்தோம். சில ஆண்டுகள் பிரிந்த பிறகே இழப்பின் வலி புரிந்தது. இப்போது எங்களுக்குள் நல்ல புரிதல் வந்திருக்கிறது. எனவே, திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறோம்’’ என்கிறார்கள்.
இது போன்று உங்களுக்கும் பிரிதலின் காயம் போய்விட்டதா, நல்ல புரிதல் வந்திருக்கிறதா என்பதைப் பாருங்கள். துரோகம், வன்முறை, போதைப் பழக்கம் போன்ற காரணங்களால் பிரிவு நடந்திருந்தால் திருந்திவிட்டதை வாய் வார்த்தையாக நம்ப வேண்டாம். இரண்டு பேரும் கவுன்சிலிங் செல்லுங்கள். நன்கு பழகிப் பார்த்து, போதிய காலம் எடுத்துக்கொண்டு முடிவு எடுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
