உலகில் முட்டாள்கள் எண்ணிக்கையே அதிகம்

இந்த மாதப் புத்தகம் – The Basic Laws of Human Stupidity

தொடர்ந்து தவறு செய்யும் நபர்களை முட்டாள் என்று கிண்டல் செய்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு சுயபுத்தியும் இருக்காது, சொல்புத்தியும் இருக்காது.

முட்டாள்தனம் என்பது அறிவில்லாமை என்று சொல்ல முடியாது. சொந்தமாக சிந்திக்காமல் இருப்பது, அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் இருப்பது, உண்மையை ஏற்காமல் பிடிவாதம் பிடிப்பது என்று சொல்லலாம்.

முட்டாள்தனத்தின் அறிகுறிகள்

முட்டாள்களின் செயல்கள் ஆச்சர்யமாக இருக்கும். அதாவது மீண்டும் மீண்டும் ஒரே தவறு செய்வதைப் பார்க்க முடியும். அதேபோல், தனக்கு எல்லாமே தெரியும் என்ற அகங்காரம் இருக்கும். கேள்வி கேட்கப்படுவதற்கு முன்பாகவே பதில் சொல்வார்கள். உணர்ச்சிரீதியாக முடிவெடுப்பார்கள்.

தவறு செய்துவிட்டேன் என்பதை முட்டாளாக இருப்பவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. புதிதாக எதையும் கற்றுக்கொள்ள மாட்டார். அரைகுறையாகத் தெரிந்ததை வைத்துக்கொண்டு, அதிகம் தெரிந்தது போன்று அலட்டிக்கொள்வார்.  

எல்லோரும் முட்டாள்கள்

எல்லா மனிதரும் சில நேரங்களில் முட்டாள்தனமாக நடப்பதுண்டு. அதாவது, சிந்திக்காமல் செயல்படும்போது அறிவு வேலை செய்வதில்லை. எனவே, புத்திசாலியாக இருப்பவரும் கோபம் வரும்போது முட்டாளாகிவிடலாம்.

அதேபோல் மனதில் பேராசை, பொறாமை, பழி வாங்கும் எண்ணம், அகங்காரம் அதிகரிக்கும்போது முட்டாள் போன்று நடந்துகொள்கிறார்கள். அதேபோல் காதல் வரும்போது முட்டாள்தனமும் சேர்ந்தே வந்துவிடும்.

நான் என்ன தவறு செய்தேன், ஏன் இப்படி நடக்கிறது என்று ஒருவர் தன்னுடைய தவறைப் புரிந்துகொண்டு, விழிப்படைந்து கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டால், அவர் முட்டாள்தனத்தில் இருந்து வெளியே வந்துவிடுவார்.

அந்த வகையில் மனிதர்களின் முட்டாள்தனத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒரு வித்தியாசமான புத்தகம் பற்றி பார்க்கலாம். இத்தாலிய வரலாற்றாசிரியரும் பொருளாதார சிந்தனையாளருமான கார்லோ எம். சிப்போல்லா (Carlo M. Cipolla) எழுதிய தி பேசிக் லா ஆஃப் ஹியூமன் ஸ்டூப்பிடிட்டி என்ற நூல் முட்டாள்தனம் குறித்து ஆழமாக விவாதிக்கிறது.

மனிதர்கள் தனியாக இருக்கும்போதும், கூட்டமாக இருக்கும்போது எப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கூர்மையாகவும் நகைச்சுவையாகவும் விவரிக்கிறார் சிப்போல்லா. பொதுவாக மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கிறார் சிப்போல்லா.

  1. தனக்கும் பிறருக்கும் நன்மை செய்பவர் புத்திசாலி மனிதர்கள்.
  2. தன்னுடைய நன்மைக்காக பிறருக்கு தீமை செய்பவர் குற்றவாளி மனிதர்கள்.
  3. பிறருக்கு நன்மை செய்வதால் தனக்கு தீமை செய்து கொள்பவர் அப்பாவி.
  4. தானும் துன்பப்பட்டு, பிறருக்கும் துன்பம் தருபவர் முட்டாள்.

இந்த நான்கு வகை மனிதர்களில் குற்றவாளி, அப்பாவி மனிதர்களை விட முட்டாள் மனிதர்களே ஆபத்தானவர்கள். எனவே, முட்டாள்கள் பற்றிய அடிப்படை விதிகளை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

1. முட்டாள்கள் எண்ணிக்கையே அதிகம்

ஏழை, பணக்காரர், நிறைய கற்றவர், கல்லாதவர், உயர்ந்த பதவியில் இருப்பவர், அடிமட்டத் தொழிலாளி என எல்லா சமூகத்திலும், எல்லா தரவரிசையிலும் முட்டாள்கள் இருக்கிறார்கள். எனவே, நாம் நினைப்பதை விட அவர்கள் எண்ணிக்கை அதிகம். அதனால், எல்லா இடங்களிலும், எந்த நேரத்திலும் முட்டாள்களை சந்திக்க வேண்டியிருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மனிதர்கள் பொதுவாக மற்றவர்களின் திறமையைக் குறைவாக, தவறாக மதிப்பிடுகிறார்கள். இதனால், முட்டாள்களின் தாக்கத்தை எளிதாக அலட்சியம் செய்கிறோம். ’இவர் இப்படிச் செய்ய மாட்டார்’ என்ற நம்பிக்கையில் முட்டாள்களை அடையாளம் காணத் தவறுகிறோம்.


2. முட்டாள்தனம் என்பது தனித்துவம்

அந்த குடும்பத்தில் எல்லோரும் அறிவாளிகள், அந்த கல்லூரியில் பயின்றவர்கள் புத்திசாலிகள் என்று எதையும் உறுதியாக வரையறுக்கவே முடியாது. ஏனென்றால்,  முட்டாள்தனம் என்பது மனிதரின் தனித்துவ குணம். முட்டாள்தனத்துக்கும் அறிவு, சமூக நிலை, செல்வம் ஆகியவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  

3. முட்டாளின் செயல்கள்

முட்டாள்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு சிப்போல்லா தரும் விளக்கம் என்ன தெரியுமா..? அவர் என்ன செய்தாலும் தீமையாகத்தான் இருக்கும். அவரது செயலால் அவருக்கு எந்த லாபமும் இருக்காது என்றாலும் செய்வார். முட்டாள்தனம் என்பது அறிவின்மை மட்டும் அல்ல, அது விளைவுகளைப் புரிந்துகொள்ளாத செயல். தன்னுடைய செயலால் மற்றவர்களுக்கு நஷ்டம் அல்லது துன்பம் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது அல்லது புரியாது.

4. முட்டாள்கள் ஆபத்தானவர்கள்

புத்திசாலி கொடிய மனிதரை விட முட்டாள் ஆபத்தானவர். ஏனென்றால் ஒரு கொடிய மனிதர் என்ன செய்வார் என்பதை கணிக்க முடியும். ஆனால் முட்டாளின் செயல்களைக் கணிக்கவே முடியாது.  அவர் எப்போது, என்ன செய்வார் என்று கணிக்க முடியாத காரணத்தால், அவர் சமூகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார்.

பொதுவாக முட்டாள்களை நகைச்சுவையாக அல்லது கிண்டலாக மட்டுமே மக்கள் பார்க்கிறார்கள். முட்டாள்களின் சக்தியை எப்போதும் குறைத்து மதிப்பிட்டு அலட்சியம் செய்கிறோம். அவரால் எதுவும் செய்ய முடியாது என்று நினைப்பதுதான் முட்டாள்தனம். ஒரே ஒரு முட்டாள் எடுக்கும் தவறான முடிவு, ஒரு நிறுவனத்தையே மூடிவிடும் அளவுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஒரு முட்டாள் செய்யும் காரியத்தால் குடும்பமே சிதைந்துவிடலாம்.

தேவை விழிப்புணர்வு

முட்டாள்களை பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் செயலில் மட்டுமே முட்டாள்தனத்தைக் கண்டுபிடிக்க முடியும். வெளிப்படையான தோற்றம் அல்லது சாதனைகளை வைத்து ஒருவரின் உண்மையான அறிவை தீர்மானிக்க முடியாது.

அரசியல்வாதியாக, நடிகராக, தொழிலதிபராக, ஆசிரியராகவும் முட்டாள்கள் இருப்பதுண்டு. இப்படிப்பட்ட முட்டாள்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக விலகி நிற்பதே நிம்மதியான வாழ்க்கைக்கு நல்லது என்கிறார் ஆசிரியர் சிப்போல்லா.

இந்த நூல் மனிதர்களைப் புரிந்துகொள்ள ஒரு புதிய பார்வையை வழங்குகிறது. அறிவு மட்டுமல்ல, செயல்களின் விளைவுகளை உணர்ந்து நடப்பதுதான் உண்மையான புத்திசாலித்தனம் என்பதை நினைவூட்டுகிறது. சமூகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவரும், முட்டாள்தனத்தின் தாக்கத்தை உணர்ந்து, அதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த நூலின் மையச் செய்தி.

முட்டாள்கள் ஜாக்கிரதை.

Leave a Comment