சிம்பிளி சூப்பர்
நடிகர் மோகன்லாலுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தியாவில் மிகச்சிறந்த நடிகர், மிகச்சிறந்த மனிதாபிமானி. அதோடு போகிற போக்கில் தத்துவங்களை அள்ளித் தெளிப்பவர். வாழ்க்கை அனுபவங்களை பல்வேறு பேட்டிகளில் சர்வ சாதாரணமாக ஆழ்ந்த கருத்துக்களுடன் அள்ளித் தெளிப்பார்.
மோகன்லால் அடிக்கடி எல்லோருக்கும் ஞாபகப்படுத்தும் தத்துவம் இதுதான். ‘’வாழ்க்கையை அதிகமாக கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள். நடப்பதை ஏற்றுக்கொண்டு அமைதியாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். நமக்கு கிடைத்த தருணத்தில் முழுமையாக வாழ்வதே போதும்’’ என்று கூறியிருக்கிறார்.
நினைவுகளின் துயரம்
அவர் நடித்த பழைய படங்களை தொலைக்காட்சி, ஓ.டி.டி. என எங்கேயும் மோகன்லால் பார்ப்பதே இல்லை. அதற்கு அவர் கொடுத்திருக்கும் விளக்கம் ஒரு நல்ல தத்துவம்.
’’நான் நடித்த பழைய படங்களின் சில காட்சிகளை பார்க்கும்போது, என் மனம் சோகத்தில் மூழ்கிவிடும். அந்த பிரேம்களில் என்னுடன் நின்றிருந்த பல நடிகர், நடிகைகள் இன்று உயிருடன் இல்லை என்ற சோகம் என்னை ஆட்கொள்கிறது.
ஆனால், துக்கப்படுவதால் என்ன பிரயோஜனம்? நாளை நானும் மறைந்துவிடுவேன். அதுதான் யதார்த்தம். இந்த உண்மை முழுமையாக தெரிந்தும் கூட நான் வருத்தப்படுகிறேன். நமது கண்ணீர் என்பது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது. உலகம் எத்தனையோ தத்துவங்களைப் பார்த்துவிட்டது. எனினும், மனிதன் இன்னும் அழுதுகொண்டே இருக்கிறான். நானும் ஒரு சாதாரண மனிதன்தானே.
யாரும் பிரிவதில்லை
எனது தாய், தந்தை, சகோதரர் ஆகியோர் என்னைவிட்டு பிரிந்துவிட்டனர் என்பது எனக்கு அதிக துயரத்தை அளிக்கிறது. எனினும், ஒருபோதும் நான் தனிமையில் இருப்பதாக நினைத்து வருத்தப்பட்டது இல்லை. கண்களை மூடினால், அவர்கள் எனக்குள் இருப்பது போலவே தோன்றுகிறது. என்னால் அவர்களை தொடவோ, பார்க்கவோ முடியாது என்பது மட்டுமே நிஜம்’’ என்று கூறியிருக்கிறார்.
அடேங்கப்பா…
