கவித்துவம்
ஆயிரம் வார்த்தைகளில் சொல்லவேண்டியதை, சுருக்கமான வார்த்தைகளில் நறுக்கென சொல்வதே கவிதை. சில கவிதைகள் மனசுக்குள் ஊடுருவி ஏதேதோ செய்துவிடும். அப்படிப்பட்ட சில கவிதைகள்.
அப்பா
அப்பா என்ன செய்யறார்
என்ற கேள்விக்கு
எனக்கு அப்பா இல்லை சார்
என பதிலுரைக்கும்
ஆறாம் வகுப்பு சிறுமி
சலனமின்றி
முகத்தை வைத்திருக்கிறாள்
நமது இருக்கைதான்
பூமிக்கடியில்
நழுவிக் கொண்டிருக்கிறது
- கே. ஸ்டாலின்
ஆளுக்கொரு கடல்
கணவன் மனைவி மகள்
முவரும் கடற்கரைக்கு போயினர்
கணவன்
கடலின் பரப்பைப் பார்த்தான்
மனைவி
நீலத்தை கண்களால் குடித்தாள்
சின்ன வெள்ளி நண்டின்
பின் ஓடினாள் மகள்
அவரவருக்கு வெவ்வேறு
கடல் பார்த்தல்
- முத்துவேல்
அலறல்
அய்யனார் கோவிலில் அலறிய
ஆட்டின் சத்தம்
கடவுளுக்கு கேட்கவில்லை என்றால்
உன் மனக்குமுறல் மட்டும்
எப்படி கேட்கும்..?
- வெண்பா
