ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : வாழ்வில் இன்பத்தைவிட துன்பமே அதிகம் வருவது ஏன்?
- எஸ்.புவனேஸ்வரன், புதுவை
ஞானகுரு :
துன்பத்தைவிட, துன்பம் வந்துவிடுமோ என்ற அச்சம்தான் பலருடைய இன்பத்தை கபளீகரம் செய்துவிடுகிறது. தவறி கீழே விழுவதை குழந்தை தோல்வியாக அல்லது அவமானமாக கருதுவதில்லை. மீண்டும் மீண்டும் விழுந்து எழுந்து நடக்கிறது. ஆனால் வளர்ந்தவுடன் துன்பத்தையும் துக்கத்தையும் கண்டு மனிதன் அச்சப்படுகிறான். அதனைத் தாண்டி செல்வதற்குத் தயங்குகிறான். தனக்கு நேரும் துன்பத்தையும் இன்பமாக ஏற்றுக்கொள்ள பழகுவதுதான் இதற்குத் தீர்வு.
கேள்வி : ஆரோக்கியமாக வாழ சிம்பிள் டிப்ஸ் தாருங்கள்?
- புனிதா ராஜ்குமார், ஶ்ரீவில்லிபுத்தூர்.
ஞானகுரு :
காலை, மதியம், இரவு மூன்று வேளையும் முக்கால் வயிறு உணவு போதும். அசைவமோ, சைவமோ மென்று தின்னும் பழக்கம் வேண்டும். தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதும் கண் அசரும்போது தூக்கமும் முக்கியம். கழிவுகளை வெளியேற்றாமல் கட்டுப்படுத்தக் கூடாது. இப்படி உடல் இயக்கத்திற்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்துபாருங்கள், உடலும் மனமும் உங்கள் வசப்படும்.
