ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : மகிழ்ச்சியோடு வாழ என்ன செய்யவேண்டும்?
- எஸ்.கெளரி வடிவேல், சென்னை.
ஞானகுரு :
தேன், மாம்பழம் போன்றவை இனிப்பானவை மட்டுமின்றி சுவையும் சத்துக்களும் மிகுந்தவை. அதற்காக மூன்று நேரமும் இவற்றை மட்டுமே சாப்பிட முடியாது. அதனால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையே தவறு.
மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கவேண்டுமே தவிர, வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி மட்டுமே நிரம்பியிருக்கக் கூடாது. பைத்தியக்காரர்களால் மட்டும்தான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க முடியும். மகிழ்ச்சி, துன்பம், கோபம், சண்டை, சமாதானம், ஊடல், கூடல் என எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை. இப்படி வாழ்வதுதான் மகிழ்ச்சியான வாழ்வு.
கேள்வி : மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமா?
- பி.ராஜேஸ், சங்கரன்கோவில்
ஞானகுரு :
இறைவனை கல்யாண புரோக்கர் ரேஞ்சுக்கு அவமானப்படுத்த வேண்டாம். நீங்கள் நல்ல கணவன் என்றால், நல்ல மனைவி அமைவார் அல்லது அவள் நல்லவராக மாறிவிடுவார். நீ ஏமாற்றுக்காரர் என்றால், பெண் நூறு மடங்கு சாகசம் செய்வார். ஜாக்கிரதை.
