ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : இறைவனை எப்படி வணங்குவது நல்லது..?
- வந்தனாராஜன், தேனி.
ஞானகுரு :
கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் இந்த உலகை படைத்தவர் என்றால் நிச்சயம் மனிதரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டார். ஏனென்றால், அன்பைத்தவிர பிள்ளையிடம் இருந்து அம்மாக்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. பெற்றவளே கேட்காதபோது… படைத்தவன் என்ன கேட்கப் போகிறான்? சுயநலமற்ற நல்லவனாக இருங்கள். அதுதான் படைத்தவனுக்கும் ஈன்றவளுக்கும் மனிதர்கள் செய்யவேண்டிய சரியான வழிபாடு.
……………….
கேள்வி : வாஸ்துப்படியான வீட்டுக்கும் மனிதனுக்கும் தொடர்பு உண்டா?
- எம்.சிவக்குமார், விவேகானந்தர் தெரு.
ஞானகுரு :
இந்த உலகம் உருண்டை போன்ற வடிவம் கொண்டது, அது சுற்றிக்கொண்டே இருக்கிறது என்பதை அறிவியல் மட்டுமல்ல ஆன்மிகமும் ஏற்றுக்கொள்கிறது. இரவில் வடக்கே தலை வைத்து படுக்கும் மனிதன், பகலில் எந்தத் திசையில் படுத்திருப்பான் என்று தெரியுமா?
சுற்றுவது கண்ணுக்குத் தெரியவில்லை என்பதற்காக திசைகளை கற்பனையாக வடிவமைப்பது, கணக்கு போடுவதற்கு வசதியாக இருக்கலாமே தவிர, வாழ்க்கைக்கு வசப்படாது. சூரியன் எல்லா நாட்களிலும் ஒரே இடத்தில் உதிப்பதில்லை என்பதை புறக்கண்ணாலும் பார்க்க முடியும். நிலவு தேய்வதும் இல்லை, வளர்வதும் இல்லை என்றாலும் தேய்பிறை, வளர்பிறை என்பது சரிதானா? அடுத்த நொடியில் மனிதர்கள் என்ன செய்வார்கள் என்பதை அவர்களே அறிய மாட்டார்கள். அப்படியிருக்கும்போது மனிதர்களின் வாழ்க்கைக்கு சூரியனையும் சந்திரனையும் துணைக்கு அழைப்பதும் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதும் எப்படி சரியாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
………………………………….
கேள்வி : எல்லோருக்கும் நல்லவனாய் வாழமுடியுமா?
- பி.சரவணகுமார், காரியாபட்டி.
ஞானகுரு :
உங்களுக்கு மட்டும் நீங்கள் நல்லவராக இருந்தால் போதும். உலகத்திற்கே நல்லவராக இருப்பதாக அர்த்தம்.
