மரணம் இல்லாத வாழ்வு எப்படியிருக்கும்..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : மனிதர்களை இயக்கும் சக்தி எது?

  • டி.மோகனா, கல்பாக்கம்.

ஞானகுரு :

நம்பிக்கையின் பிடியில்தான் மனிதர்கள் இயங்குகிறார்கள். சிலருக்கு கடவுள்  நம்பிக்கை, சிலருக்கு பணம், உறவு, நட்பு மீது நம்பிக்கை. இன்றைய பொழுதைவிட, நாளை சிறப்பாக விடியும் என்ற நம்பிக்கைதான் மனிதனை காட்டுக்குள் இருந்து நாகரிகத்திற்கு கூட்டிவந்துள்ளது. நம்பிக்கை இழந்த மனிதர் கடந்த காலத்தில் சிக்கிக்கொள்கிறார்.

…………………

கேள்வி : மரணம் இல்லையென்றால் உலகம் எப்படியிருக்கும்?

  • டி.தனலட்சுமி, திருத்தணி.

ஞானகுரு :

கொடுமையாக இருக்கும். முடிவு இல்லாத கதையைப் படிக்க யாருமே விரும்புவதில்லை. மரணத்துக்குள் சம்பாதிக்க வேண்டும், மரணத்திற்குள் சாதிக்க வேண்டும் என்ற எல்லைக்கோடு இல்லையென்றால், யாரும் யாருக்காகவும் உழைக்க மாட்டார்கள்.

காதலும் கலவியும் அர்த்தமற்றுப் போகும். குழந்தை பிறப்பு சாபமாக கருதப்படுமே தவிர, வரமாக இருக்காது. கடவுளே மரணம் கொடு என்று மனிதன் தவம் இருக்கத் தொடங்குவார்கள். மரணம் இனிமையானது என்பதை நம்புங்கள், வாழ்க்கை சுகமாக இருக்கும்.

Leave a Comment