ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : உண்மைக்கும் நேர்மைக்கும் இன்றைக்கு என்ன மதிப்பு..?
- எஸ்.பழனிக்குமார், மதுரை.
ஞானகுரு :
ஒருவர் மீது உண்மையில் எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பது மரணத்தில்தான் தெரியவரும். அந்த மயானத்தில் தேடிப்பாருங்கள். உண்மை, நேர்மையின் நிஜ மதிப்பு தெரிந்துவிடும்.
…………………
கேள்வி : அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று ஒளவை சொல்லி இருக்கிறாரே, அத்தனை உயர்வானதா மனிதப்பிறப்பு..?
- ஆர்.பிரியதர்ஷினி, முக்கொம்பு.
ஞானகுரு :
எந்த ஒரு பிறப்பும் உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை. புழு, பூச்சியின் உயிருக்கும் மனித உயிருக்கும் இயற்கை எந்த வேறுபாடும் கொடுக்கவில்லை. இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழத் தெரிந்தவர்கள் மட்டும், இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாக கொண்டாடலாம்.
……………………….
கேள்வி : சாதி, மதம் இல்லாத உலகம் வருமா..?
- ஏ.ராஜேஷ், சிவகாசி.
ஞானகுரு :
மனிதன் ஒரு சுயநல விலங்கு. விலங்குகளிடம் இருக்கும் அடிப்படைக் குணம் இன்னமும் மனிதரிடம் நீடிக்கிறது. அது தலைவனாக இருப்பது அல்லது அடிமையாக இருப்பது. சாதி, மதம் இல்லாத தேசத்தில் நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு இருக்கிறது.
நிறமும் பிரச்னை இல்லாத தேசத்தில் வேறு ஏதேனும் ஒன்றை மனிதர்கள் உயர்வு, தாழ்வாக உருவாக்கிக்கொள்கிறார்கள். ஏனென்றால் மனிதன் பிரச்னைகளின் செல்லப்பிள்ளை. தானே பிரச்னைகளை உருவாக்கி, தானே அதில் சிக்கிக்கொள்வான்.
