கண்டுபிடிக்கும் வழிகள்
மெனோபாஸ் எப்போது வரும், எப்படி வரும் என்பதை மருத்துவரீதியில் கணக்கிடவும் கண்டுபிடிக்கவும் முடியும்.
மாதவிடாய் தொந்தரவுகளால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். வலி, வேதனையை தாங்கமுடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். இந்த வேதனையைத் தீர்ப்பதற்கு நிறைய பெண்கள் எக்கச்சக்கமாக செலவழித்து சிகிச்சை எடுக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பெண்கள் மெனோபாஸ் வந்துவிட்டால், இந்த தொந்தரவுகளில் இருந்து விடுதலை பெற்றுவிடலாம் என்று நம்புகிறார்கள். எப்போது ஒரு பெண்ணுக்கு மெனோபாஸ் வரும் என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா..?
மருத்துவம் இதற்கு என்ன சொல்கிறது..?
ஒரு பெண்ணுக்கு மிகச் சரியாக இந்த வயதில்தான் மெனோபாஸ் வரும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. ஆனாலும், சில விஷயங்களை வைத்து தோராயமாக அதை ஓரளவு கணிக்க முடியும்.
அதாவது குறிப்பிட்ட பெண்ணின் அம்மாவுக்கு எந்த வயதில் மெனோபாஸ் வந்தது என்பதை வைத்து தன்னுடைய மெனோபாஸ் வயதையும் அதே வயதில் எதிர்பார்க்கலாம். அது கிட்டத்தட்ட சரியாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்கியமற்ற டயட், பாஸிவ் ஸ்மோக்கிங் போன்ற வாழ்வியல் காரணங்கள் மெனோபாஸ் வயதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கர்ப்பங்களைச் சுமந்த பெண்ணுக்கு மெனோபாஸ் சற்று தாமதமாகலாம்.
இன்றைய நவீன மருத்துவத்தில் ‘ஏ.எம்.ஹெச்’ (Anti-Mullerian hormone) எனப்படும் ‘ஆன்டிமுலேரியன் ஹார்மோன்’ டெஸ்ட்டின் மூலம் சினைப்பையில் எத்தனை கருமுட்டைகள் இருப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இந்த இருப்பை வைத்து அந்தப் பெண் மெனோபாஸுக்கு முந்தைய பிரி-மெனோபாஸ் நிலையில் இருக்கிறாரா, மெனோபாஸ் நிலையில் இருக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மெனோபாஸ் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு இயற்கையான மாற்றம். பொதுவாக 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும் நிலை மெனோபாஸ். இந்த மெனோபாஸ் மாற்றத்தை பெண்கள் வரவேற்கவே வேண்டும். ஏனென்றால், சில முக்கியமான நன்மைகள் உருவாகின்றன.
சிரமங்களில் இருந்து விடுதலை
மாதவிடாய் வலி, அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் ஒழுங்கின்மை போன்ற பிரச்சினைகள் முற்றிலும் முடிவுக்கு வருகின்றன. சானிட்டரி பேடு எப்போதும் கையோடு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது உடல் மற்றும் மன ரீதியாக நிம்மதி தருகிறது.
கர்ப்பம் கவலை இல்லை
மெனோபாஸ் பிறகு கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. எனவே, உறவுகளினால் எதிர்பாராத கர்ப்பம் ஏற்படுவது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது, தம்பதிக்குள்ளான உறவை மகிழ்ச்சியாக மாற்றுகிறது. கர்ப்பம் பற்றிய பயம் இல்லாததால், சிலருக்கு உறவில் மன அழுத்தம் குறைந்து, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ஹார்மோன் மாற்றங்கள்
மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியுடன் தொடர்புடைய தலைவலி, மனஅழுத்தம், புண்கள் போன்றவை குறைந்து விடுகிறது. சிலருக்கு ஹார்மோன் மாற்றத்தால் வேறு சில பிரச்னைகள் தோன்றுகிறது என்றாலும் நல்ல மாற்றங்களும் உருவாகிறது என்பதே உண்மை.
வாழ்க்கை சுதந்திரம்
மாதவிடாய் நாட்களில் நிறைய பெண்கள் வெளியே செல்வதற்கு விரும்புவதில்லை. எனவே, இனிமேல் பல்வேறு திட்டங்களை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. பயணம், வேலை, சமூக வாழ்க்கை போன்றவற்றில் பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியும்.
தன்னம்பிக்கை அதிகரிப்பு
இந்த வயதில் பெண்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் மன ரீதியாக வலுப்பெறுகிறார்கள். தங்களின் தேவைகள், முன்னுரிமைகள் ஆகியவற்றை தெளிவாகப் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
கவனிக்க வேண்டியவை
மெனோபாஸ் நன்மைகள் இருந்தாலும், சில பெண்களுக்கு தூக்கமின்மை, எலும்பு பலவீனம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, இந்த காலகட்டத்தில் சத்தான உணவு, உடற்பயிற்சி, மருத்துவர் ஆலோசனை போன்றவை தேவைப்படுகிறது.
மெனோபாஸ் என்பது ஒரு முடிவு அல்ல, அது ஒரு புதிய வாழ்க்கை கட்டத்தின் தொடக்கம். அதை பயமாக பார்க்காமல், புரிந்து கொண்டு சரியாக பராமரித்தால், இந்த காலத்தையும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் கடக்கலாம்.
