டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD (Psychiatry)
கடினமான சூழல், சிக்கலான தருணத்தையும் ஒரே ஒரு சிரிப்பு மாற்றிவிடும். சூழலை உற்சாகமாக்கிவிடும். எப்படி தெரியுமா?
நகைச்சுவை என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல, அறிவுபூர்வமானது. நகைச்சுவை ஒரு வேடிக்கை மனப்பான்மை என்பதைத் தாண்டி, அது ஒரு மனிதனுக்கு மனபலம் தருகிறது.
மிகக் கடினமான சூழ்நிலையில் இருந்து ஒருவர் தன்னை விடுவித்துக்கொள்ள, அந்த கடினமான சூழ்நிலையை எதிர்த்துப் போராட இந்த நகைச்சுவை உணர்வு முக்கியமானது. ஒரு சூழலை நகைச்சுவையாக மாற்றுவது என்பது எளிதல்ல. ஆனால், அதை மட்டும் செய்துவிட்டால் எத்தகைய கடினமான சூழலில் இருந்தும் தப்பித்து வந்துவிடலாம்.

மன இறுக்கத்திற்கு விடுதலை
நகைச்சுவை என்பது ஒரு சூழலின் இறுக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அது நமது உடலில் சில வேதியியல் மாற்றங்களையும் செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அப்படி ஏற்படும் மாற்றமானது நமது மன இறுக்கத்தையும் வெகுவாகக் குறைக்கிறது.
எந்த ஒரு பிரச்னையையும் மிக விரைவாக சரி செய்ய வேண்டுமானால், அந்தப் பிரச்னையில் உள்ள நகைச்சுவை அம்சத்தை நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
“நகைச்சுவை உணர்வுதான் மனித குலத்திற்குக் கிடைத்த ஆகச்சிறந்த வரப்பிரசாதம்” என்கிறார் அறிஞர் மார்க் ட்வைன்.
“நகைச்சுவை உணர்வு என்ற ஒன்று எனக்கு இல்லையென்றால் நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்” இப்படி சொன்னவர் நமது மகாத்மா காந்தி.
’ஒரு வளர்ச்சியடைந்த, முதிர்ச்சியடைந்த மற்றும் பக்குவப்பட்ட மனநிலைதான் நகைச்சுவை என்கிறார். நிறைய உளவியல் சிக்கல்களை, மனம் நகைச்சுவை உணர்வைக் கொண்டுதான் சரி செய்கிறது’ என்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட்.
நாம் ஒரு சூழலை நகைச்சுவை மனப்பான்மையால் இலகுவாக மாற்றுவதன் மூலம், அதில் உள்ள பிரச்னைகளின் வேர்களை எந்தப் பதற்றமும் இன்றி தெரிந்துகொள்ளலாம். பிறகு, அந்தப் பிரச்னையை நாம் நிதானமாகக் கையாளலாம்.
எந்த ஒரு பதற்றமும் இன்றி தெளிவாகவும், நிதானமாகவும், அறிவுப்பூர்வமாகவும் ஒரு பிரச்னையை அணுகும்போது நாம் அந்தப் பிரச்னையில் இருந்து விரைவாக மீண்டு வருவது மட்டுமல்லாமல், அந்தப் பிரச்னையின் பாதிப்பில் இருந்தும் நமது மனதையும் உடலையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
சூப்பர் ஸ்பிரிங்
நகைச்சுவை என்பது ஒரு ஸ்பிரிங். வாழ்க்கையின் அத்தனை மேடு பள்ளங்களில் இருந்து நமது உடலையும் மனதையும் காப்பாற்றுகிறது. அந்த ஸ்பிரிங் இல்லையென்றால் நாம் ஒவ்வொரு பிரச்னையிலும் விழுந்து, எழுந்து அடிபட்டு போய்க்கொண்டிருப்போம்.
நகைச்சுவையின் நோக்கம் என்னவென்றால், நாம் நமது சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும். ஒரு கடினமான சூழலை இலகுவாக மாற்ற வேண்டும். அப்படி செய்ய வேண்டும் என்றால் முதலில் அந்தச் சூழலை நாம் முழுமையாக அறிவுப்பூர்வமாக புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சூழலில் உள்ள நகைச்சுவை அம்சத்தை நமது நுண்ணறிவால் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது அந்த நகைச்சுவை உணர்வு இயல்பாகவே எந்த முனைப்பும் இன்றி நமது மன இறுக்கத்தைக் குறைக்கும்.
இறுக்கமான சூழ்நிலையும், இறுக்கமான மனமும்தான் ஒரு பிரச்னையை எதிர்கொள்வதில் நமக்குச் சிக்கல்களைத் தரும். அந்தச் சிக்கலில் இருந்து நம்மை முழுமையாக மீட்டுக்கொண்டு வரவேண்டுமானால், நிச்சயம் நாம் நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இங்கு ஜாலிக்காக இரண்டு குட்டி நகைச்சுவைகள்.
நரகம்
செத்துப்போன ஒருவன் நரகத்துக்கு அனுப்பப்பட்டான். நரகத்தில் மூன்றுவிதமான தண்டனை முறைகள் இருந்தன. மூன்றையும் பார்த்துவிட்டு எந்த தண்டனையை ஏற்றுக்கொள்வதென்று அவனே முடிவு செய்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.
முதலாவது அறைக்குப் போனவன், அங்கே எல்லோரும் தலைகீழாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். ஒவ்வொருவர் முகத்திலும் வலியின் அவஸ்தை பிரதிபலித்தது.
இது வேண்டாம் என்று அடுத்த அறைக்குப் போனான். அங்கே… எல்லோரும் தலையில் பனிக்கட்டிகளைச் சுமந்தபடி இருந்தார்கள். பனிக்கட்டிகள் உருகி வழிந்துகொண்டிருக்க, அந்தக் குளிர்ச்சியில் ஜில்லிட்டு நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு நிமிடம் அந்த வேதனையை எண்ணிப் பார்த்தவன், ‘ஐயோ… இது வேண்டாம்’ என்று அடுத்த அறைக்குத் தாவினான்.
மூன்றாவது அறையில் ஆச்சரியம்! அங்கிருந்தவர்கள் படுரிலாக்ஸ்டாக காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ‘ஆஹா.. இதுதான் நான் தேடிவந்த இடம். இங்கேயே நான் இருந்துவிடுகிறேனே’ என்று தன் முடிவையும் சொல்லிவிட்டான்.
‘நீங்கள் போய் இந்தக் குழுவில் சேர்ந்துகொள்ளலாம்’ என்று அனுமதியும் தரப்பட, உள்ளே போய் ஒரு கப் காபி வாங்கி சுவைக்க கையிலெடுத்தான்.
அப்போது உள்ளே நுழைந்த எஜமானர், “ஓகே.! உங்களது காபி இடை வேளை முடிந்துவிட்டது. எல்லோரும் அந்த தீச்சட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று உத்தரவு போட்டார்.
நம்மாள் முகத்தில் ஈயாடவில்லை.
அவசரக்காரன்.
கணவன் மனைவிக்குள் வாக்குவாதம். சிறிய சச்சரவு, பெரிதாகி இரண்டு பேரும் மூன்று நாட்களாக பேசிக்கொள்ளவில்லை.
இதனால் கோபமான மனைவி, ‘நான் இப்போது 10 வரை எண்ணுவேன். அதற்குள் நீங்கள் பேசவில்லை என்றால், நான் எனது அம்மா வீட்டிற்கு நிரந்தரமாகப் போய் விடுவேன்…’ என்றாள்.
கணவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதைவெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான். மனைவி எண்ணத் தொடங்கினாள்.
மனைவி – 1 … 2 … 3 … 4 … 5 … 6 … 7… 8 … 9 … என்று எண்ணியவள் கொஞ்சம் இடைவெளி விட்டாள்.
10 சொல்லிவிடுவாள் என்று எதிர்பார்த்த கணவனுக்கு ஏமாற்றம். அதனால், ‘சீக்கிரம் 10 சொல்லு’ என்றான்.
உடனே மனைவி, ‘அதான், நீங்க பேசிட்டீங்களே. இனிமே நான் போகமாட்டேன்’ என்று சொல்லிவிட்டாள். தன் அவசரத்தனத்தை எண்ணி இன்று வரை வருத்தப்படுகிறான் கணவன்.
