குட்டி காஞ்சனா குமரேசன் பேய் பயம்

டீன் கவுன்சிலிங் – எஸ்.கே.முருகன்

பயம் இல்லாத மனிதர்கள் யாருமே இல்லை. ஒரு மாணவருக்கு பேய் பயம் தீர்க்கப்பட்ட கவுன்சிலிங் நடைமுறையை விவரிக்கிறார் மனவள ஆலோசகர்.

நடிகர் லாரன்ஸ் நடித்த காஞ்சனா என்ற நகைச்சுவை கலந்த திகில் படத்தின் கதை நிறைய பேருக்கு ஞாபகம் இருக்கும். பேய் என்றாலே லாரன்ஸ் பயந்து நடுங்குவார். வளர்ந்த பிறகும் பாத்ரூம் போவதற்கு அம்மாவை துணைக்குக் கூட்டிச் செல்வார். கைகள் நிறைய தாயத்து கட்டிக்கொள்வார். சின்ன சத்தம் கேட்டாலே பயந்து வேகமாக ஓடிப்போய் அப்படியே அம்மா இடுப்பில் தாவி அமர்ந்துகொள்வார்.

அந்த படத்தில் லாரன்ஸ் நடித்திருப்பது போன்று நிறைய சிறுவர், சிறுமிகளுக்குப் பேய் பயம் இருப்பது இயல்பு தான். அப்படி பேய் என்றாலே பயப்படுகிறான் என்று அழைத்து வரப்பட்டான் குமரேசன். 10ம் வகுப்பு படிக்கும் குமரேசனை அவனது அம்மாவும், அப்பாவும் அழைத்து வந்திருந்தார்கள். நெற்றி நிறைய திருநீறு பூசி பக்திப் பழம் போன்று அமர்ந்திருந்தான்.

இருட்டு பயம்

குமரேசனின் அம்மா பேசினார். ‘’இந்த வருடம் பரீட்சை முக்கியம் என்பதால் இரவு 11 மணி வரை படிக்கச் சொல்கிறோம். அப்படி படிக்கும் நேரத்தில் எங்கு என்ன சத்தம் கேட்டாலும் நடுங்கத் தொடங்குகிறான். பக்கத்திலே யாராவது அமர்ந்திருக்க வேண்டும் என்கிறான். கொஞ்சம் எழுந்து போனாலும் பின்னாடியே வந்துவிடுகிறான். இரவு படுக்கும் நேரத்தில் எங்கள் இருவருக்கும் நடுவில் படுக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறான். இவனுக்குத் தங்கை இருக்கிறாள். இதில், இவருக்கும் பெரிய சண்டையே நடக்கிறது. மகளுக்கு பேய் பயம் இல்லை. அவள் குமரேசனை குட்டிக் காஞ்சனா என்று கிண்டல் செய்கிறாள். அதற்காக குமரேசனுக்கும் மகளுக்கும் சண்டை நடக்கிறது.

வீட்டுக்காரர் அடிக்கடி வெளியூர் செல்கிறார். அதுபோன்ற தருணங்களில் குமரேசன் ரொம்பவும் பயப்படுகிறான். அடுத்த ஆண்டு வெளியூர் ஹாஸ்டலில் போடலாம் என்று இருக்கிறோம். ஆனால், இது போன்று பயம் இருந்தால் அவனால் சமாளிக்க முடியாது என்பதால் எங்கள் குடும்ப மருத்துவரிடம் பேசினோம். அவர் தான் கவுன்சிலிங் போனால் தைரியமாகிவிடுவான் என்று கூறினார், அதனாலே அழைத்துவந்தோம்’’ என்றார்.

‘’அம்மா, அப்பா இருக்கும்போது உனக்கு ஏன் பயம் வருகிறது?’’ என்று குமரேசனிடம் கேட்டேன்.

’’எங்க வீட்ல பேய் இருக்கு. அதான், எனக்கு பயம்’’ என்றான்.

அவன் சொன்னதுக்கு அர்த்தம் புரியாமல் குமரேசனின் அப்பாவைப் பார்த்தேன். உடனே அவர், ‘’போன வருஷம் திடீர்னு ஒரு நாள் ராத்திரி எனக்கு தூக்கத்தில் மூச்சு விட முடியாத அளவுக்கு தடுமாறுனேன். யாரோ என் மேல உட்கார்ந்து இருந்ததைப் பார்த்தேன். அதை அமுக்குவான் பேய்னு எங்க ஊர்ப்பக்கம் சொல்வாங்க. அது சும்மா பயம் காட்டும். யாரையும் எதுவும் செய்யாது. அந்த சம்பவத்திலிருந்து ரொம்பவும் பயப்படுகிறான்’’ என்றார்.

‘’உங்க டாக்டர்கிட்டே இதை சொன்னீங்களா..?’’

’’இதுக்கெல்லாம் டாக்டர்கிட்டே போக வேண்டியதில்லை, பக்கத்துக்குக் கோயிலுக்குப் போய் மந்திருச்சி திருநீறு பூசிக்கிட்டேன். சரியாகிடுச்சு. அதுக்குப் பிறகு வரலை. ஆனா, இவன் அதை மறக்க மாட்டேங்கிறான்…’’

‘’முதல்ல மருத்துவரீதியில் உங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு நீங்க தெரிஞ்சுக்கணும். அது அமுக்குவான் பேய் கிடையாது. ஸ்லீப் பேரலைஸ் எனப்படும் ஒரு சாதாரண பக்கவாத நிலை….’’

‘’இல்லை, யாரோ என் மேல படுத்திருந்ததை நான் நல்லா பார்த்தேன்…’’ என்றார் விடாப்பிடியாக.

‘’நீங்கள் பார்த்தது நிஜம் இல்லை. அது ஒரு கனவு நிலை காட்சி. தூக்கத்தில் எல்லோராலும் எடுத்தவுடன் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போக முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்த தூக்கத்திற்குப் போவார்கள். அந்த நேரத்தில் ஹாலிங் பெல் அடிச்சாலும் சத்தம் கேட்காது. சாதாரண தூக்கத்தில் சட்டென்று எழுந்துவிடுவோம். எல்லோருக்கும் ஆழ்ந்த தூக்கமும் சாதாரண தூக்கமும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். இப்படி கனவு காணும் நேரத்தில் கை அல்லது கால்களை அசைக்க நினைத்தாலும் முடியாது. விழிக்கத் தோன்றும், ஆனால் விழிக்க முடியாது. இந்த கால கட்டத்தில் மூச்சு விடுவதில் சிரமமும், நம் உடல் மீது யாரோ அமர்ந்திருப்பது போன்றும் தோன்றும். இது உண்மையில் சில நொடிகள் நீடிக்கும் என்றாலும் நீண்ட நேரப் போராட்டம் போன்று தெரியும்.

நிஜமான பொய்

இந்த தூக்கத்தில் வரும் பக்கவாதம் என்பார்கள். இது ஒரு சிக்கலான பிரச்னை இல்லை. கடுமையான பணிச்சூழல், மனதில் அழுத்தங்கள், உடலில் ஏதேனும் நோய் பாதிப்பு, காற்று இறுக்கமான இடத்தில் தூங்கும் போது இந்த மாதிரி பிரச்னை வரலாம். எனவே, நீங்கள் பார்த்தது பேய் இல்லை. இதை உங்களுடைய மருத்துவரிடமும் கேட்டு உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சொன்ன விஷயத்தினால் குமரேசன் ரொம்பவும் பயந்திருக்கிறான். வீட்டில் பேய் இருக்கிறது என்ற நினைப்பில் இருக்கிறான்’ என்றேன்.

‘’எங்க கிராமத்தில…’’ என்று மீண்டும் தொடங்கினார் குமரேசனின் தந்தை.

‘’கிராமப்புறங்களில் விஷயம் தெரியாமல் சொல்கிறார்கள் என்றால் அதை நீங்களும் சொல்லக்கூடாது. வேறு உனக்கு என்ன பயம்?’’ என்று குமரேசனிடம் கேட்டேன்.

‘’அப்படின்னா எங்க வீட்ல பேய் இல்லையா?’’

‘’கண்டிப்பாக இல்லை, இனி உன் வீட்டில் நீ தைரியமாக இருக்கலாம்… ஏதாவது வித்தியாசமான சத்தம் கேட்டால் அது என்ன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்… அப்போது தான் உண்மை தெரியும்…. இந்த காலத்தில் எங்கேயும் பேய் இல்லை’’

‘’நிறைய பேர் பேய் வந்து ஆடுகிறார்கள், செத்துப் போகிறார்கள்…’’

‘’யார் சொன்னது..?’’

‘’அப்பா கிராமத்தில் நடந்ததை சொல்லியிருக்கிறார்…’’ என்றதும் அவனது அப்பாவைப் பார்த்தேன்.

‘’எங்க கிராமத்தில் நடந்ததை சொல்வாங்க, அதை நான் பிள்ளைங்களுக்குச் சொல்வேன்’’ என்றார்.

‘’நீங்கள் பேய் பிடித்தவர்களை நேரில் பார்த்திருக்கிறீர்களா..?’’

‘’இல்லை, ஊரில் சொல்வார்கள்..’’

‘’இப்படி எல்லாமே பொய்யான கதைகள். எங்கோ நடந்த ஒரு விஷயத்தை ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லும்போது மிகப்பெரிய பேய்க் கதையாக வந்து நிற்கும். அறிவியல் வளர்ந்த பிறகு, இந்த விஞ்ஞான காலத்தில் எங்கேயும் ஒரே ஒரு பேய் கூட உண்மையில் கண்டறியப்படவில்லை. பேய் பிடித்ததாக கூறும் ஒரு சில நபர்களுக்கு மனநலக் கோளாறு மட்டுமே காரணமாக இருக்கிறது. அதற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி இருக்கிறார்கள்…’’

‘’அப்படின்னா பேய் இல்லைன்னு சொல்றீங்களா..?’’

‘’அறிவியல் ரீதியாகவும், மருத்துவரீதியாகவும் பேய் என்பது இல்லை. ஆனால், எல்லா மனிதர்களுக்குள்ளும் பேய் பற்றிய பயம் இருக்கிறது. அதனை யாராவது தூண்டும்போது மிகவும் பயப்படத் தொடங்குகிறார்கள். உங்களுடைய பேய் பயமே உங்கள் பிள்ளையை இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. உண்மையில் உங்களுக்குத் தான் கவுன்சிலிங் தேவை. இதுவரை நீங்கள் எங்கேயும் பார்த்தே இராத பேய்க் கதைகளை எல்லாம் உண்மை என்று நம்பி, பிள்ளைகளுக்குச் சொல்லி இருக்கிறீர்கள்… இனி நீங்கள் தான் அவனுக்கு நம்பிக்கையும் கொடுக்க வேண்டும்’’

’’எப்படி..?’’

‘’எல்லா மனிதரின் மனதிலும் நம்பிக்கையும் இருக்கிறது, பயமும் இருக்கிறது. நீங்கள் எதை அதிகம் வளர்க்கிறீர்களோ அது மிகப்பெரிதாக வளர்கிறது. குமரேசனுக்குப் பேய் பயத்தை அதிகம் வளர்த்திருக்கிறீர்கள். இனி, அப்படி எதுவும் பேசாதீர்கள். இருட்டுக்குள் போனால் பேய் இருக்கும் என்று குமரேசன் பயந்தால், நீங்கள் முதலில் இருட்டுக்குள் போய் நின்று காட்டுங்கள். ஏதேனும் சத்தம் வருகிறது என்று சொன்னால், அது என்ன சத்தம் என்று அவனுக்குத் தெளிவு படுத்துங்கள்…’’

‘’இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’’

‘’காயத்ரி மந்திரம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?’’ பெற்றோர் இருவரும் உதட்டைப் பிதுக்கினார்கள்.

‘’யூ டியூப்பில் காயத்ரி மந்திரத்தை தேடி எடுத்து தினமும் மாலை நேரத்தில் வீட்டில் ஓலிக்கச் செய்யுங்கள். காயத்ரி மந்திரத்தின் மகிமைக்கு எந்த பேயும் அண்டாது. எனவே, தினமும் ஒலிக்கச் செய்யுங்கள். குமரேசன் பயம் இல்லாமல் படிக்கத் தொடங்குவான். மாதம் ஒரு நாள் குமரேசனை கூட்டி வாருங்கள், பேய் பற்றி மேலும் கொஞ்சம் தகவல் அவனுக்குப் பகிர வேண்டும்’’ என்றேன்.

பிரச்னைக்கு யார் காரணம்?

குமரேசன் முகத்தில் கொஞ்சம் நம்பிக்கை தெரிந்தது. குமரேசனை வெளியே அனுப்பிவிட்டு பெற்றோரிடம் பேசினேன்.

’’உங்கள் மகனின் பிரச்னைக்கு நீங்களே காரணமாக இருக்கிறீர்கள். பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன், இருட்டு அறையில் பூட்டி விடுவேன் என்று சொல்லி பயம் காட்டுவது ஆழ் மனதில் பதிந்துவிடும். இப்போது காயத்ரி மந்திரம் என்பது குமரேசனுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக சொல்லியிருக்கிறேன். உண்மையில் பேய் பற்றி இந்த காலத்தில் யாரும் பயப்படுவதற்கு அவசியம் இல்லை. எனவே, குமரேசனின் பேய் பயத்தை கிண்டல் செய்யாதீர்கள். உறவினர், நண்பர்களிடம் குமரேசனின் பேய் பயத்தை சொல்லாதீர்கள். அது அவனுடைய மனதில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடும். குமரேசன் எதற்காகப் பயந்தாலும், அதில் பயப்பட எதுவும் இல்லை என்று நிதானமாகப் புரிய வையுங்கள்.

ஏதேனும் பேய் படத்தைப் போட்டு, ஜாலியாக பேசி சிரித்தபடி அந்த படத்தைப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக பேய் பயத்தில் இருந்து அவனை வெளியே கொண்டுவாருங்கள். பேய் பற்றி என்ன சந்தேகம் கேட்டாலும் தீர்த்து வையுங்கள் அல்லது இங்கு அழைத்து வாருங்கள்’’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன். அதன் பிறகு குமரேசன் வரவே இல்லை.

  • ஞானகுரு கவுன்சிலிங். முன்பதிவுக்கு 80725 89355

Leave a Comment