இயற்கை சிகிச்சை
இளம் பெண்களின் அழகுக்கு சவால் விடுகிறது மரு எனப்படும் வார்ட். இதை பரவாமல் தடுக்கும் வழிகளைப் பார்க்கலாம்.
மரு என்பது தோலில் தோன்றும் சிறிய, கடினமான, கட்டி போன்ற வளர்ச்சி. இது ஆபத்தானது இல்லை என்றாலும் சில நேரங்களில் வலி, எரிச்சல், அழகு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
மருத்துவக் காரணங்கள்
மருக்கள் உருவாக முக்கிய காரணம் ஹூயுமன் பாப்பிலோமா எனப்படும் Human Papillomavirus (HPV) வைரஸ். இந்த வைரஸ் தோலின் மேல் அடுக்கு செல்களை தாக்குவதன் காரணமாக தோலில் கட்டி போல மரு தோன்றுகிறது. கொலாஜன் மற்றும் ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகவும் வாய்ப்பு உண்டு.
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாக மருவைத் தொடுவதன் தொடுவதன் மூலம் பரவுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது. அதேபோல் மரு உள்ளவர் பயன்படுத்தும் துண்டு, ஆடை, செருப்பு, சோப்பு போன்றவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பரவலாம். மரு உடைந்து காயம் அல்லது ரத்தம் வருவதன் மூலம் மற்றவர்களுக்குப் பரவலாம். கிணறு, பொது குளியலறைகள், நீச்சல் குளங்கள் பயன்படுத்தும் நபர்களுக்கும் மரு பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.
எனவே, மற்றவர்களின் மருக்களை தொட வேண்டாம். மரு உள்ளவர்களின் தனிப்பட்ட பொருட்களை பகிர வேண்டாம். மரு உடைந்து அல்லது சிதைந்து காயம் உருவானால் அதை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். பொதுவிடங்களில் காலில் செருப்பு அணியுங்கள்
மரு வகைகள்
விரல்கள், கைகளில் தோன்றுவது பொதுவான மருக்களாக கருதப்படுகிறது. பாதங்களில் தோன்றுவது பிலாண்டர் வார்ட்ஸ் எனவும் முகம், கழுத்துகளில் தோன்றுவது ஃப்லாட் வார்ட்ஸ் என்றும் அடையாளம் காணப்படுகிறது. அரிதாக சிலருக்கு நீளமான, நூல் போன்ற வடிவத்திலும் மருக்கள் தோன்றக்கூடும். பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு மரு அதிகம் தோன்றுகிறது.
மருத்துவ சிகிச்சைகள்
மருக்கள் பல நேரங்களில் தானாகவே மறைந்து போகலாம். ஆனால் அவை வலி தரும் போது அல்லது அதிகமாக பரவும்போது சிகிச்சை அவசியம். ஆரம்ப கட்டத்தில் சாலிக்ளிக் ஆசிட் க்ரீம் மேல்பூச்சாகப் பூசும்போது மரு உதிர்கிறது. திரவ நைட்ரஜன் மூலம் மருவை உறைய வைத்தும் அழிக்கமுடியும். இப்போது லேசர் சிகிச்சை மூலம் மருவின் செல்களை துல்லியமாக அழிக்கும் நவீன முறை தோல் மருத்துவர்கள் மட்டுமின்றி அழகு சிகிச்சை நிலையங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
மருக்கள் பொதுவாக ஆபத்தானவை அல்ல என்றாலும் மரு வேகமாக வளர்வது, வலி அதிகமாக இருப்பது, ரத்தம் அல்லது சீழ் வைத்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மரு என்பது ஒரு சாதாரண வைரஸ் தொற்று. சரியான பராமரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மூலம் அதை எளிதாக கட்டுப்படுத்தலாம். ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தினால் மட்டுமே பரவாமல் தடுக்க முடியும்.
வீட்டு மருத்துவம்
மருவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்த முடியும். இஞ்சியைத் துருவி அல்லது இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாற்றை அவ்வப்போது மருக்கள் உள்ள இடத்தில் வைத்து வந்தால் மரு தானாக உதிரும். பெரிய மருவாக இருந்தால் அதை பற்றாகக் கூடாக போடலாம்.
அதேபோல் அன்னாசி பழத்தின் சாறினை எடுத்து மருக்கள் மீது வைத்திருந்தாலும் மருக்கள் உதிர ஆரம்பிக்கும். சின்ன வெங்காயத்தினை அரைத்தோ அல்லது இடித்தோ சாறெடுத்து அந்த சாறினை மருக்கள் மீது வைக்கலாம். இது எரிச்சல் தரும் என்றாலும் விரைவிலேயே மரு உதிர்ந்து விடும்.
ஆப்பிள் சீடர் வினிகர் கொழுப்பைக் கரைக்க மட்டுமல்ல, மருவைக் கரைக்கவும் பயன்படும். தினமும் காலையும் மாலையும் ஆப்பிள் சீடர் வினிகர் சில துளிகள் மருக்கள் மேல் வைத்து வந்தால் மரு உதிர்ந்து இருந்த இடம் தெரியாமல் ஆகிவிடும்.
சருமப் பிரச்சினைகளுக்கு எலுமிச்சை சிறந்த தீர்வு என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, மரு உள்ள இடத்தில் அடிக்கடி எலுமிச்சை சாறு பூசி வந்தாலும் மரு உதிர்ந்து விடும்.
கற்றாழை உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருள். அதனால் குழந்தைகளுக்கு மரு உள்ள இடத்தில் இந்த ஜெல்லை அப்ளை செய்யலாம். வலி, எரிச்சல் இல்லாமல் மரு உதிர்ந்துவிடும். வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்துகையில் உடனடி நிவாரணம் எதிர்பார்க்கக்கூடாது. ஒரு சில மாதங்கள் ஆகலாம், பொறுமையுடன் கடைப்பிடித்தால் மருவை அகற்றி, இழந்த அழகை மீட்டுவிட முடியும்.
