என்ன செய்தார் சைதை துரைசாமி – 498
கருணாநிதிக்கு எலுமிச்சம் பழம் மாலை போட்ட சைதை துரைசாமி மீது, முதல்வரை கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் பரோலில் வந்த சைதை துரைசாமியை, ‘இவர்தான் அண்ணாதிமுகவின் முதல் தியாகி, அண்ணா திமுகவின் பகத்சிங். எனக்காக எந்த காரியமும் தியாகமும் செய்வதற்கு எம்.ஜி.ஆர் படை தயாராக இருக்கிறது என்பதற்கு இவன்தான் உதாரணம்’’ என்று பாராட்டினார்.
அதோடு சைதை துரைசாமியிடம், ‘உனக்கு இன்னமும் ஆபத்து இருக்கிறது. அதனால் கொஞ்ச நாட்களுக்கு எங்கும் வெளியே செல்லவேண்டாம். என்னுடனேயே இரு. உனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது என் பொறுப்பு’என்று சொல்லி, அவருடனே தங்க வைத்துக்கொண்டார். திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல் வரை புரட்சித் தலைவருடன் மாம்பலம் அலுவலகத்திலும், தலைமைக் கழகத்திலும் தங்கியிருந்தார் சைதை துரைசாமி. அந்த திமுக ஆட்சியில் மட்டும் சைதை துரைசாமி மீது மட்டும் 17 பொய் வழக்குகள் போடப்பட்டன. அத்தனை வழக்குகளிலும் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார்.
கருணாநிதிக்கு எலுமிச்சம்பழம் மாலை போட்ட வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சைதை துரைசாமிக்கு 9 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. உயர்நீதி மன்றத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்தது.
அந்த வழக்கின் தீர்ப்பு வந்ததும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சைதை துரைசாமியை அழைத்துப் பாராட்டியதோடு சைதாப்பேட்டை தொகுதி அமைப்பாளர் பதவி கொடுத்து கெளரவித்தார். இளம் வயதில் தொகுதி அமைப்பாளர் என்று அதிமுக பொதுக்குழுவில் சைதை துரைசாமியை பெருமைப்படுத்தினார்.
கருணாநிதிக்கு எலுமிச்சம்பழம் மாலை போட்டது குறித்து சைதை துரைசாமி இப்போதும், ‘’அன்றைய தினம் தாக்குதலில் என் உயிர் போயிருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஏனென்றால், புரட்சித்தலைவர் வருத்தத்தை நீக்கிய மகிழ்ச்சி எனக்கு கிடைத்தது. நான் பிறந்தது பிப்ரவரி 16ம் தேதி என்றால், நான் மறுபிறவி எடுத்தது டிசம்பர் 16. உயிருக்கு அஞ்சாமல் முதல்வருக்கு மேடை ஏறி எலுமிச்சம்பழம் மாலை போட்ட என்னுடைய அர்ப்பணிப்புத்தன்மையைப் பாராட்டி, என்னை உயிர் போன்ற நேசித்த புரட்சித்தலைவரின் அன்புதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரும் வரம்…’’ என்று மெய் சிலிர்க்கிறார்.
- நாளை பார்க்கலாம்.
