புரட்சித்தலைவருடன் போனில் முதல் பேச்சு

என்ன செய்தார் சைதை துரைசாமி – 497

கருணாநிதிக்கு மேடையேறி எலுமிச்சம் பழம் மாலை அணிவித்த சைதை துரைசாமியை, அங்கேயே வைத்து அடித்துத் துவைத்தார்கள். மயங்கி விழுந்த சைதை துரைசாமி செத்துவிட்டார் என்றே காவல் துறையிடம் ஒப்படைத்தார்கள்.

காவல் நிலையத்தில் வைத்தும் சைதை துரைசாமி மீது தாக்குதல் நடைபெற்றது. இந்த நேரத்தில் எப்படியோ தகவல் அறிந்து எம்.ஜி.ஆர். பதறிப்போய் காவல் நிலையத்துக்கு போன் செய்து விசாரித்தார்.

எம்.ஜி.ஆர் நேரில் காவல் நிலையத்துக்கு வந்துவிடுவதாக எச்சரிக்கை செய்தபிறகே சைதை துரைசாமியை போனில் பேசவைத்தார்கள். எதிர்முனையில் எம்.ஜி.ஆர். இருக்கிறார் என்பதை அறிந்ததும் சைதை துரைசாமிக்கு அந்த வலியிலும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

‘’தலைவரே… தலைவரே…’’ என்று மட்டும் கதறி, மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தார்.

கட்சித் தொண்டன் உயிருடன் இருக்கிறான் என்பதை அறிந்துகொண்ட பிறகே எம்.ஜி.ஆர். போனை வைத்தார். அன்று மட்டும் எம்.ஜி.ஆர். போன் செய்யவில்லை என்றால், சைதை துரைசாமியை உயிருடன் சிறைக்கு அனுப்பியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

இந்த வழக்கில் 21 நாட்கள் கழித்து சைதை துரைசாமிக்கு பரோல் கிடைத்தது. அவர் நேரடியாக மாம்பலம் அதிமுக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கிருந்த புரட்சித்தலைவர் சைதை துரைசாமியை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அனைவரது முன்னிலையிலும், ‘இவர்தான் அண்ணாதிமுகவின் முதல் தியாகி, அண்ணா திமுகவின் பகத்சிங். எனக்கு ஒன்று என்றால் எத்தகைய காரியத்தையும் தியாகமும் செய்வதற்கு எம்.ஜி.ஆர் படை தயாராக இருக்கிறது என்பதற்கு இவன்தான் உதாரணம்’’ என்று பாராட்டி, சைதை துரைசாமியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment