என்ன செய்தார் சைதை துரைசாமி – 496
ஆளும் கட்சியின் முதல்வர் கருணாநிதி இருந்த மேடையில் ஏறிய சைதை துரைசாமி அவருக்கு எலுமிச்சம்பழம் மாலை அணிவித்ததுடன் நில்லாமல், மைக்கில் பதவி விலக வேண்டும் என்று உரத்த குரலில் கோஷமிட்டு, முதல்வர் தலையில் நோட்டீஸ்களைத் தூவிய செயல் எல்லோரையும் ஒரு கணம் அதிரவைத்தது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுவந்த கருணாநிதி, ‘இவனை பிடியுங்கள்’ என்று உத்தரவிட்டதும் கழகத் தொண்டர்களும் குண்டர்களும் சேர்ந்து சைதை துரைசாமியை மேடையிலிருந்து கீழே இழுத்துப்போட்டு அடித்து உதைத்தார்கள். கைகளாலும் தடிகளாலும் அடித்து மிதித்ததில் சைதை துரைசாமி மயங்கிவிழுந்தார். இந்த கொடூரமான வன்முறைத் தாக்குதல் கருணாநிதி கண் முன்னே நடந்தது. சைதை துரைசாமி பேச்சுமூச்சு இல்லாமல் கிடப்பதைப் பார்த்ததும் பயந்து, காவலர்களிடம் ஒப்படைத்தார்கள்.
கடுமையான வலி, வேதனையுடன் சைதை துரைசாமி காவல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார். முதல்வரை கொலை செய்யும் முயற்சி என்றும், பிளேடு போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்ததாகவும் சைதை துரைசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதோடு, காவல் நிலையத்தில் வைத்தும் சைதை துரைசாமி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தகவல் எப்படியோ புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்குப் போய்விட்டது.
உடனே அவர் காவல் நிலையத்துக்குப் போன் செய்து, ‘’எங்கள் கட்சித் தொண்டன் உயிருடன் இருக்கிறானா…?’’ என்று கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் காவல்துறையினர் மழுப்பியதும், ‘’நான் இப்போதே அவனிடம் பேச வேண்டும். நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால் இப்போதே காவல் நிலையத்துக்கு வந்துவிடுவேன்’’ என்று எச்சரித்தார்.
- நாளை பார்க்கலாம்
