என்ன செய்தார் சைதை துரைசாமி – 494
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை வருத்தப்பட வைத்த கருணாநிதிக்கு பொதுமேடையில் ஏறி எலுமிச்சம்பழ மாலை அணிவிக்கலாம் என்ற சைதை துரைசாமியின் ஆலோசனையைக் கேட்டு அத்தனை நிர்வாகிகளும் அலறினார்கள். இப்படி சிந்திக்கக்கூட வேண்டாம், உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கை செய்து விலகிவிட்டனர்.
யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் எலுமிச்சம்பழ மாலை அணிவிக்கப் போகிறேன் என்று சைதை துரைசாமி மனதிற்குள் உறுதி எடுத்துக்கொண்டார்.
டிசம்பர் 16 அன்று காலை முதல் ஏராளமான போலீஸார் பொதுக்கூட்ட மேடையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தார்கள். அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத சைதை துரைசாமி, பி.எம்.எஸ். தையற்கடைக்குச் சென்று 26 எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கோர்த்துக்கொண்டார். அதன் கீழே கருப்பு, சிவப்பு வண்ணத் துணிகளால் குஞ்சம் கட்டி, கருணாநிதி படத்தை பெரிதாக ஒட்டினார்.
எலுமிச்சம்பழம் வெளியே தெரியாமல் மறைத்து, கருணாநிதி படம் மட்டும் வெளியே தெரியும் வகையில் ஒரு நாளிதழில் மாலையைச் சுற்றி எடுத்துக் கொண்டு பொதுக்கூட்ட மேடையை நோக்கிச் சென்றார்.
சைதை துரைசாமி கையில் நோட்டீஸ் கத்தையாக இருந்தது. அதில், ‘திருவாரூர் கருணாநிதியே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்’என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. அதோடு, கருணாநிதியிடம் கொடுப்பதற்கு மனு ஒன்றும் கையில் எடுத்துக்கொண்டு பொதுக்கூட்ட மேடை அருகே நின்றார்.
முதல்வருக்கு மாலை அணிவிப்பவர்கள் மேடையின் பின்புறம் வரிசையாக நிற்கும்படி அறிவிப்பு வெளியானது. உடனே சைதை துரைசாமி வேகமாகச் சென்று அந்த வரிசையில் நின்றுகொண்டார். அப்போது சைதை திமுக கிளைக்கழகச் செயலாளராக இருந்த சேகர் வரிசையில் நின்ற சைதை துரைசாமியை பார்த்துவிட்டார்.
- நாளை பார்க்கலாம்
