ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : நிறைய வீடுகளில் பெண்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. ஆனாலும் பெரும்பாலான பெண்கள், ஆண் குழந்தை பெற்றுக்கொள்ளவே விரும்புவது ஏன்?
- எஸ்.ராஜேந்திரன், முத்தால்நகர்.
ஞானகுரு :
பெண்ணுக்கு, தன் உடல் மீது துளியும் மரியாதை கிடையாது. தன்னைவிட சகல விதத்திலும் ஆண் உயர்ந்தவன் என்ற எண்ணம் அவள் அடி மனதில் புதைந்திருக்கிறது. கணவனுக்குப் பிறகு தன்னைக் காப்பாற்ற ஓர் ஆண் வேண்டும் என நினைக்கிறாள். இந்த சுயநலமும் நம்பிக்கையின்மையும்தான், அவளை ஆண் குழந்தைக்கு ஆசைப்பட வைக்கிறது.
……………….
கேள்வி : பணம், பணம் என்று பேயாய் திரிகிறார்களே, இது எங்கே போய் முடியும்?
- டி.சகுந்தலா, பாண்டியன் நகர்.
ஞானகுரு :
இந்த உலகில் கண்ணுக்குத் தெரிந்த கடவுள் என்றால், அது பணம்தான். நீங்கள் விரும்பும் சந்தோஷங்களை வாங்குவதற்கு பணத்தால் முடியும். அதனால் பணத்துக்காக நாயாய், பேயாய் அலைவது தவறில்லை. ஆனால், உங்களுக்கு எவ்வளவு பணம் போதும் என்பதை நிர்ணயிப்பதில்தான் வெற்றி உங்களுக்கா அல்லது பணத்துக்கா என்பது தெரியவரும்.
