ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : யாரை வழிகாட்டியாகப் பின்பற்றி நடந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்?
- எஸ்.மாலதி, சோழிங்கநல்லூர்.
ஞானகுரு :
எந்தப் பாதையும் யாருடைய விருப்பத்தையும் முழுமையாக நிறைவேற்றுவதில்லை. யார் சொன்னது என்றாலும் கேளுங்கள். யார் எழுதியது என்றாலும் படியுங்கள். ஆனால், உங்கள் வாழ்க்கைப் பாதையை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். யாரையாவது வழிகாட்டியாகப் பின்பற்றினால் ஒரு நாள் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.
……………….
கேள்வி : திடீர் திடீரென ஹார்ட் அட்டாக் என்று மரணம் அடைபவர்கள் அதிகரித்துவிட்டார்களே, இதை மருத்துவத் தோல்வி என்று சொல்லலாமா..?
- சி.முத்துப்பாண்டி, காரைக்குடி
ஞானகுரு :
காலம்காலமாக இதய நோய்க்கு மனிதர்கள் செத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் முந்தைய காலத்தில் ஒருவர் இதயநோயால் இறந்தார் என்பது தெரியாது. திடீரென செத்துப் போனவரை பேய் அடித்துவிட்டது, பயந்துவிட்டார் என்று டிசைன் டிசைனாக வாய்க்கு வந்த காரணங்களைச் சொன்னார்கள்.
ஆனால், இன்று தெருவுக்குத் தெரு மருத்துவர்கள் முளைத்துவிட்டதால், இதய நோயினால் மரணம் என்று அடையாளம் காணப்படுகிறது. இது, தோல்வி அல்ல வளர்ச்சி.
