ஜோதிட நம்பிக்கை அதிகரிப்பது ஏன்..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : வணிகர்கள், வியாபாரிகளின் வாரிசுகள் அவர்களுடைய தொழிலைத் தொடர விரும்புவதில்லையே… ஏன் இந்த நிலைமை?

  • எம்.சந்தநாதன், நெய்வேலி

ஞானகுரு :

உங்கள் கேள்வியிலே பதிலும் இருக்கிறது. வணிகம் செய்வதற்குத் துணிச்சல் தேவை. 24 மணி நேரமும் வியாபார சிந்தனை வேண்டும். லாபமும் வரும், எதிர்பாராத நஷ்டமும் வரும். இதை தாங்கிக்கொண்டு போராட வேண்டும்.

தங்களுடைய போராட்டம் தங்கள் பிள்ளைக்கும் வரவேண்டாம் என்று பெற்றோர்களே நினைக்கிறார்கள். அதனால் குளிர்சாதன அறைக்குள் சொகுசாக அமர்ந்து வேலைசெய்து சம்பாதிப்பதை பெருமை என்று பெற்றோர் நினைக்கிறார்கள், அதையே பிள்ளைகள் வழிமொழிகிறார்கள். வணிகம் செய்ய வாய்ப்பு இருந்தும், அடிமை சேவகம் செய்யும் நபர்கள், சிறைக்கைதியாக பணியாற்றுவதை நினைத்து பின்னாட்களில் வருந்துவார்கள், ஆனால் அப்போது வெள்ளம் தலைக்கு மேல் போயிருக்கும்.

……………………..

கேள்வி : இன்று ஜோதிடம் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரிப்பது போன்று தெரிகிறதே..?

  • டி.கெளசல்யா, ஶ்ரீவில்லிபுத்தூர்.

ஞானகுரு :

மனிதருக்குத் தேவை நம்பிக்கை. இன்னும் மூன்று மாதத்தில் உங்கள் தலையெழுத்து மாறப்போகிறது என்று நம்பிக்கை விதைக்கிறார்கள் ஜோதிடர்கள். மூன்று மாதத்தில் நடக்கவில்லை என்றால் அவர்கள் தங்களுக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறார்களே தவிர, ஜோதிடர் மீது சந்தேகப்படுவதில்லை. மீண்டும் அதே ஜோதிடரிடம் போய் கேட்கிறார்கள். இந்த நம்பிக்கையும் ஆசையும்தான் ஜோதிட வெற்றியின் அடிப்படை.

எப்படியாவது தங்கள் வாழ்க்கை மாறினால் போதும் என்று ஆசைப்படும் ஜனங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதால், ஜோதிடர்கள் காட்டில் அடைமழை பொழிகிறது. பெயரையோ, எழுத்தையோ மாற்றினால் கோடீஸ்வரனாகலாம் என்று சொல்லும் ஜோதிடர், ஏன் இன்னமும் யாசிப்பவராக இருக்கிறார்..? கிளி ஜோசியம் சொல்பவர் ஏன் இன்னமும் மரத்தடியில் இருக்கிறார்..? ஜாதகம் பார்ப்பவரால் ஏன் தங்கள் வாழ்க்கையை பரிகாரம் மூலம் மாற்ற முடிவதில்லை என்றெல்லாம் கேள்வி கேட்கும் சிந்தனை கூட மக்களுக்கு எழுவதில்லை என்பதுதான் வேடிக்கை.  எப்போதும் ஏமாற்றுபவர் மீது தவறு கிடையாது, தொடர்ந்து ஏமாறுவதுதான் தவறு.

Leave a Comment