ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : கோயில்களுக்குச் செல்லும்போது மனம் அமைதியடைகிறது… இது கடவுளின் மகிமைதானே..?
- பி.வாணி பத்மநாபன், வத்றாப்.
ஞானகுரு :
அப்படியென்றால் கோயிலில் மட்டும்தான் கடவுள் இருக்கிறாரா? கோயிலுக்கு வரும் மனிதர்கள் மனதை சாந்தியடைய வைப்பதுதான் கடவுளின் வேலையா?
நிறைய பேருக்கு கடற்கரையில் நிம்மதி கிடைக்கிறது. சிலருக்கு பூங்காவில், சிலருக்கு சினிமா தியேட்டரில், சிலருக்கு உறவினர்களுடன் இருக்கையில் இன்பம் கிடைக்கிறது. தனிமை நிறைய பேருக்கு அமைதியும் நிம்மதியும் கொடுக்கிறது. இவை எல்லாமே கடவுள் மகிமையா என்று யோசித்துப் பாருங்கள், உங்களுக்கே உண்மை புரிந்துவிடும்.
………………….
கேள்வி : நிறைய கனவுகள் இருக்கின்றன. இவை எல்லாமே நிஜமாக என்ன செய்ய வேண்டும்?
- ஏ.ச்சாரங்கபாணி, சேலம்.
ஞானகுரு :
கனவு என்பது உங்களுடைய ஆசைகள்தான் கனவு. உங்கள் லட்சியமே கனவு. அதேநேரம், கனவுகள் நிஜமாக வேண்டும் என்றால், அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுங்கள். ஜெயித்த நபர்களின் வழிகாட்டுதல்களை பெறுவதற்கு உழையுங்கள்.
கனவு என்பது வெற்றியில் மட்டும் இல்லை, அதன் பயணத்தில் இருக்கிறது. தாஜ்மஹாலை பார்த்து ரசிக்கிறீர்கள். திரும்பி வரும்போது தாஜ்மஹாலை கையோடு கொண்டுவருவதில்லை. அந்த அனுபவங்களை மட்டுமே அசை போடுகிறோம். அப்படித்தான் கனவு நோக்கிய பயணமே மகிழ்ச்சி என்பதை புரிந்துகொண்டால், அதை அடைவதற்கான பாதையும் கிடைத்துவிடும்.
